அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்குக் கொண்டுவந்துள்ளார். ஆனால் மறுபுறம் அவரது மகன் ட்ரம்ப் ஜூனியர், இத்தாலியில் பறவைகளை வேட்டையாடியதற்காக வழக்கை எதிர்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மூத்த மகன் ட்ரம்ப் ஜூனியர். இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியின் வெனிஸ் மாகாணத்தில் உள்ள காம்பக்னா லூபியா நகரின் பாதுகாக்கப்பட்ட ஏரியில் பாதுகாக்கப்பட்ட வாத்து இனங்களை வேட்டையாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
குறிப்பாக, இத்தாலிய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் பறவை அரியவகை இனங்களில் ஒன்றான ரட்டி ஷெல்டக் வாத்துகளை அவர் வேட்டையாடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இத்தாலிய சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஐரோப்பிய பசுமைக் கட்சியைச் சேர்ந்தவருமான ஆண்ட்ரியா சனோனி அவர்மீது வழக்கு தொடுத்துள்ளார். இதுகுறித்த்து அவர், “இத்தாலி, ட்ரம்ப் ஜூனியரின் கொல்லைப்புறமாக மாறியதுபோல இருக்கிறது. இத்தாலி, அமெரிக்காவின் சொத்து அல்ல; இத்தாலியை அமெரிக்காவால் ஆட்சி செய்ய முடியாது’’ என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல, இத்தாலிய நாடாளுமன்ற உறுப்பினரான லுவானா சனெல்லாவும், இந்த சம்பவத்திற்கு விளக்கம் கோரி சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும், வெனிஸ் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மோனிகா சாம்போவும், ட்ரம்ப் ஜூனியரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார். ட்ரம்ப் ஜூனியரின் இந்த விவகாரம், இத்தாலியின் வேட்டை விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஒரு சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது.
ட்ரம்ப் ஜூனியரைப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். இருப்பினும், அனுமதிக்கப்பட்ட பகுதியில் தாங்கள் வேட்டையாடுவதற்கு அனுமதி பெற்றிருந்ததாக ட்ரம்ப் ஜூனியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ட்ரம்ப் ஜூனியர் மீதான வழக்கில் விசாரணை நடத்தப்படும் என்று இத்தாலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ட்ரம்ப் ஜூனியருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகிய இரண்டுமே விதிக்க நேரிடலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ட்ரம்ப் ஜூனியர் வேட்டை சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. கடந்த 2019ஆம் ஆண்டில், மங்கோலியாவில் ஒரு அரிய வகை ஆர்காலி மலை ஆடுகளை தேவையான அனுமதிகளைப் பெறாமல் கொன்றதற்காக அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.