காஸா மீதான தாக்குதல் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது. இருந்தபோதும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அது இன்றுவரை தொடரும் நிலையில், காஸாவை முழுமையாக நிர்மூலமாக்குவதே இஸ்ரேலின் குறிக்கோளாக இருக்கிறது. ஆம், அதற்காக காஸாவில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளது.
இன்றுவரை தொடரும் போரில், பெரிய கட்டடங்கள் மட்டுமின்றி, சிறிய கூடாரங்களைக்கூட விட்டுவைக்காமல் இஸ்ரேல் படைகள் மூர்க்கமாக தாக்கி வருகின்றன. இதிலிருந்து தப்ப வடக்கு, மத்திய காஸாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி கூட்டம்கூட்டமாகப் படையெடுத்துச் செல்கின்றனர். தெற்கில் இஸ்ரேல் ராணுவத்தின் மனிதாபிமான பகுதிகளுக்கு பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர். போரினால், இதுவரை அங்கு 65,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளதாக நம்பப்படுகிறது. ஆனாலும் போர் ஓய்ந்தபாடில்லை; அழுகுரல்களும் ஓய்ந்தபாடில்லை. மேலும், காயங்களுடன் உயிர்பிழைக்கும் நபர்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற வைப்பதற்கு மருந்துகளும் இல்லை; மருத்துவமனைகளும் இல்லை. அனைத்தையும் சுக்குநூறாக்கி வருகிறது இஸ்ரேல் ராணுவம். எங்குப் பார்த்தாலும் கட்டடச் சுவர்களே உடைந்து நிரம்பிக் கிடக்கின்றன.
இதற்கிடையே காஸாவில் உடனடியாக போரை நிறுத்தவும், பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. மேலும், ஐக்கிய நாடுகள் சபையில் உலகத் தலைவர்கள் போர்நிறுத்தம் செய்ய அழைப்புவிடுத்தபோதிலும், இஸ்ரேல் இடைவிடாத தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஆடும் இந்தக் கதகளியில் காஸாவில் தங்கியிருக்கும் பாலஸ்தீன மக்களே நாள்தோறும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து தப்பி ஓடும் பாலஸ்தீனியர்களுக்கான தற்காலிக புகலிடங்கள்கூட, தற்போது கொலைக் களமாக மாறியிருக்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம்.
அந்த வகையில், காஸாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 15 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காஸா நகரை கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நகரைவிட்டு வெளியேறுவதில் சிக்கல் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள். உயிர்பிழைக்க ஓர் இடம்விட்டு வேறு இடம் நகர்கிறோம். ஆனால் நகரைவிட்டு வெளியேறத் தேவையான பொருளாதார வசதி தங்களிடம் இல்லை என கண்ணீர்மல்கக் கூறுகின்றனர். ஓடிஓடி சோர்ந்துவிட்டதாகக் கூறுகின்றனர் சிலர். இந்நிலை என்று மாறும் எனக் கலங்கும் மக்கள் தங்களைக் காக்க சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து பணியாற்ற கோரிக்கை விடுக்கின்றனர்.
மறுபுறம், காஸாவிற்கு உதவிப் பொருள்களை ஏற்றிச் செல்லும் தன்னார்வக் குழுக்கள் செல்லும் கலன்களுக்குப் பாதுகாப்பாக இரண்டாவது போர்க்கப்பலை இத்தாலி அனுப்பியுள்ளது. செப்டம்பர் 24 அன்று தனது முதல் கப்பலை அனுப்பிய நிலையில் இரண்டாவது கப்பலும் தற்போது செல்வதாக இத்தாலி பாதுகாப்புத் துறை அமைச்சர் கைடோ கிராசெட்டோ தெரிவித்துள்ளார். ஸ்பெயினும் தனது கப்பலை பாதுகாப்புக்காக அனுப்புவதாகக் கூறியுள்ளது. உதவிப்பொருள்கள் ஏற்றிச்செல்லும் கலன்கள் க்ரீஸ் அருகே ட்ரோன்களால் தாக்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், காஸா மீதான தாக்குதல் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மற்றும் காஸா பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான 21 அம்சத் திட்டம் ஒன்றை ட்ரம்ப் வகுத்துள்ளதாகவும், இதுகுறித்து இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிணைக்கைதிகள் விடுவிப்பு மற்றும் போருக்கு பிந்தைய காஸாவின் நிர்வாகம் போன்றவை அதில் அடங்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையை இணைத்துக்கொள்ள இஸ்ரேலை அனுமதிக்க மாட்டேன் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அண்மையில் தனி நாடாக அங்கீகரித்தன. அதற்கு பதிலடி தரும் வகையில், தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரை பகுதிகளை இணைத்துக்கொள்ள வேண்டுமென இஸ்ரேல் அமைச்சர்கள் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ”பாலஸ்தீனம் என ஒரு நாடு இருக்காது” என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியிருந்த நிலையில், தாயகத்தை விட்டு வெளியேற மாட்டோம் என பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐநா சபை கூட்டத்தில் காணொளி வாயிலாக உரையாற்றிய அவர், ஹமாஸின் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலை, பாலஸ்தீனியர்கள் நிரகாரிப்பதாக தெரிவித்தார். போர் முடிந்த பிறகு காஸாவை நிர்வகிப்பதில், ஹமாஸிற்கு எந்த பங்கும் இருக்காது என்றும் குறிப்பிட்டார். காஸாவில் அமைதிக்கான திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, ட்ரம்ப், சவூதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் ஐநா ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாவும் மஹ்மூத் அப்பாஸ் கூறினார்.