அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன்னை ’வெனிசுலாவின் செயல் அதிபர்’ என அழைத்துக் கொண்டுள்ளார். இது உலகில் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாகவும், அவற்றின் பரவலை ஊக்குவிப்பதாகவும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்க தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி அமெரிக்க ராணுவம் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியது. அவர்கள், நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வெனிசுலாவின் துணை அதிபரான டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பதவியேற்றார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன்னை ’வெனிசுலாவின் செயல் அதிபர்’ என அழைத்துக் கொண்டுள்ளார்.
தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ள அவர், ’வெனிசுலாவின் செயல் அதிபர்’ என தன்னை வர்ணித்துக் கொண்டுள்ளார். நேற்று வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், "வெனிசுலாவின் தற்காலிக அதிபர் ஜனவரி 2026இல் பதவியேற்பார்" என்ற பதிவுடன் ட்ரம்பின் அதிகாரப்பூர்வ உருவப்படம் இடம்பெற்றிருந்தது. அந்தப் படம், அவரை அமெரிக்காவின் 45வது மற்றும் 47வது அதிபராகவும் பட்டியலிட்டுள்ளது. அவர் ஜனவரி 20, 2025 அன்று பதவியேற்றார் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. இது எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாட்டில் அமெரிக்காவின் பங்கு குறித்து புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.