Trump Reuters
உலகம்

தொடரும் போர் | ஈரானை வீழ்த்தமுடியாத அமெரிக்கா.. விரக்தியில் ஆத்திரமடைந்த ட்ரம்ப்!

ராணுவ அழுத்தத்தை அதிகரிப்பதா அல்லது பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதா என அதிபர் ட்ரம்ப் ஆலோசகர்கள் இரு அணிகளாகப் பிளவுபட்டு நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PT WEB

ஈரான் போர் நீண்டகாலமாக நீடிப்பதால், தெளிவான இறுதி இலக்கு மற்றும் நீண்டகால உத்தி இல்லாததே அமெரிக்க நிர்வாகத்தின் முக்கியப் பிரச்சினையாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தலைமையிலான தரப்பு ராணுவ அழுத்தத்தை அதிகரிக்க வலியுறுத்த, துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்டோர் ஆயுத இருப்பு குறைவு மற்றும் மோதல் நீடிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்; M. மீரா

ஈரானுடனான போர் ஆறாவது மாதமாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும் விரக்தியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ட்ரம்பின் மூத்த ஆலோசகர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக NBC News தெரிவித்துள்ளது.

ஈரான் விரைவில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் என்று ட்ரம்ப் எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஈரான் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், மோதல் நீடித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்க நிர்வாகத்திற்குள் தெளிவான ஒருமித்த கருத்து இல்லை எனக் கூறப்படுகிறது.

ட்ரம்பின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் NBC News-க்கு அளித்த தகவலில், ஈரான் உடனான போர் இவ்வளவு காலம் நீடிக்கும் என்று ட்ரம்ப் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், ஈரானியர்களை ஓர் ஒப்பந்தத்திற்கு சம்மதிக்கவைப்பது இவ்வளவு கடினமாக இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை. இது நீண்டகாலப் போராக இருக்கும் என அவர் கருதவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

JD Vance

மேலும், போருக்கு தெளிவான இறுதி இலக்கு அல்லது அதை அடைவதற்கான நீண்டகால உத்தி இல்லாததே அமெரிக்க நிர்வாகத்தின் மிகப்பெரிய பிரச்னை என மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தில் ட்ரம்ப் கடும் விரக்தியடைந்து, அதிகாரிகளிடம் ஆவேசமாக பேசியதாக NBC செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இந்த தகவலை மறுத்துள்ளார். மேலும், ஈரான் தனது நடவடிக்கைகளை மாற்றாத வரை, ட்ரம்பும் தனது கடுமையான அணுகுமுறையை மாற்ற மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். ஈரான் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ட்ரம்பின் ஆலோசகர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Pete Hegseth

பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தலைமையிலான ஒரு தரப்பு, ஈரான் மீது ராணுவ அழுத்தத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த அணுகுமுறையை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. மறுபுறம், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் டான் கெய்ன் உள்ளிட்டோர் எச்சரிக்கையான அணுகுமுறையை ஆதரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெளிவான நீண்டகாலத் திட்டம் இல்லாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவது, அமெரிக்காவின் ஆயுத இருப்பைக் குறைத்து, போரை மேலும் நீட்டிக்கக்கூடும் என அவர்கள் கவலைப்படுகின்றனர்.

இதனால், ஆறு மாதங்களைக் கடந்துள்ள ஈரான் போரில் ராணுவ அழுத்தத்தை அதிகரிப்பதா அல்லது பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதா என்ற முக்கிய கேள்வி ட்ரம்ப் நிர்வாகத்தின் முன் நிற்கிறது. போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த ட்ரம்புக்கு, இந்த நீண்டகால மோதல் தற்போது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது