செய்தியாளர்: ஜி.எஸ்.பாலமுருகன்
ஈரானின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான முக்கியமான ராணுவ நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் அமெரிக்க அரசின் உயர்மட்ட சமூக ஊடக விவாதக் குழு ஒன்றில், தி அட்லாண்டிக் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க் சேர்க்கப்பட்டார். தற்செயலாக நடந்தாக கூறப்படும் இந்த சம்பவம், அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் நகைப்புக்குரிய செயலாகவும் மாறியது. பாதுகாப்பு மீறல் என்று கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நியூஸ்மேக்ஸ் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸிடம் பணிபுரியும் கீழ்நிலை ஊழியர் ஒருவர்தான், ஜெஃப்ரி போல்ட்பர்க்கை தவறுதலாக குழுவில் சேர்த்திருக்கலாம் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
அந்த குழுவில் எந்த முக்கிய பாதுகாக்கப்பட்ட தகவலும் இல்லை என்றும், குறிப்பிட்ட நபரை சேர்த்ததால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதல் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாகவும், எந்த ரகசிய தகவலிலும் சமரசம் செய்யப்படவில்லை என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
ட்ரம்ப்-க்கு சொந்தமான சமூக ஊடகமான சிக்னல் செயலியில், ஹவுத்தி பி.சி. சிறிய குழு என்று பெயரிடப்பட்ட விவாதக் குழு உருவாக்கப்பட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்க ராணுவத்தின் பதிலை ஒருங்கிணைக்கும் வகையில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், வெளியுறவு அமைச்சர் மார்கோ ருபியோ உள்ளிட்ட 18 மூத்த அதிகாரிகள் அக்குழுவில் இருந்தனர்.