ராமபோசா, ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

DEATH..DEATH! தென்னாப்பிரிக்க அதிபருடன் ட்ரம்ப் வார்த்தை மோதல்; இனப் படுகொலை நடப்பதாக குற்றச்சாட்டு!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் தென்னாப்ரிக்க அதிபர் ராமபோசாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது.

PT WEB

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தை வார்த்தை மோதலாக மாறி உலகையே அதிரவைத்தது.

இந்நிலையில் தென்னாப்ரிக்க அதிபர் ராமபோசாவிடம் பேசும்போதும் அந்நாடு குறித்து ட்ரம்ப் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தென்னாப்ரிக்காவில் வெள்ளையின விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்படுவதாகவும் அவர்கள் குறிவைத்து கொல்லப்படுவதாகவும் தெரிவித்த ட்ரம்ப், இதை ஒரு இனப்படுகொலையாக பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். இதற்கு ஆதாரமாக ஒரு வீடியோவை போட்டுக்காட்டிய ட்ரம்ப் சில பத்திரிகை செய்திகளையும் காட்டினார்.

வீடியோவில் உள்ளவை கொல்லப்பட்ட வெள்ளையினத்தவர்கள் நினைவிடங்கள் என ட்ரம்ப் கூறினார். DEATH...DEATH...என்றும் அவர் கூச்சலிட்டார். இவற்றையெல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ராமபோசா பின்னர் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

ராமபோசா, ட்ரம்ப்

தென்னாப்ரிக்காவில் குற்றச்செயல்களில் பெரும்பாலும் கறுப்பினத்தவர்கள்தான் பாதிக்கப்படுவதாகவும் ராமபோசா தெரிவித்தார். ஆனால் விவசாயிகள் கறுப்பினத்தவர்கள் அல்லவே என ட்ரம்ப் பதிலளித்தார். இந்த வாக்குவாதம் சில நிமிடங்கள் நீண்டது.

முன்னதாக வெள்ளையினத்தவர் படுகொலையை காரணமாக காட்டி தென்னாப்ரிக்காவுக்கு அளித்து வந்த நிதியுதவிகளையும் ட்ரம்ப் நிறுத்தியிருந்தார். தென்னாப்ரிக்காவிலிருந்து வரும் வெள்ளையின மக்களுக்கு தஞ்சம் அளிப்பதாகவும் அறிவித்திருந்தார்.

அமெரிக்காவின் செயல்களால் தென்னாப்ரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து மீள பேச்சுவார்த்தை நடத்த ராமபோசா சென்றிருந்தார். ஆனால் தற்போது அப்பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது. தென்னாப்ரிக்காவில் வெள்ளையினத்தவர் தலைமையில் நடைபெற்று வந்த நிறவெறி அரசு நெல்சன் மண்டேலா தலைமையிலான போராட்டத்திற்கு பின் 1994ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.