ட்ரம்ப் - ஜின்பிங் pt
உலகம்

முடிவுக்கு வந்த வர்த்தகப் போர் | சீனா - அமெரிக்க இடையே உடன்பாடு.. ட்ரம்ப் சொன்ன விஷயம்!

சீனாவுடனான அமெரிக்காவின் வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

Prakash J

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தியிருந்தார். இருப்பினும், அவ்வரிவிதிப்பைத் தொடங்குவதற்கு முன்பே வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார். எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்த அவர், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பை உயர்த்தினார். பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தியது. சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதை 245 சதவீதமாக்கவும் அமெரிக்கா முயற்சித்தது.

ட்ரம்ப், ஜின்பிங்

இந்த வரி விகித உயர்வால், இரு நாட்டு வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. இதனால், அவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரமாய் நடைபெற்றது. இந்த நிலையில், அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிக்க, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவாா்த்தை இரு நாடுகளும் பரஸ்பரம் விதித்துக்கொண்ட வரியை குறிப்பிடத்தக்க அளவு குறைக்க வழிவகுத்தது. அத்துடன் பெரும்பாலான பொருள்கள் மீதான வரியை 90 நாள்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சீன பொருள்களுக்கு அமெரிக்கா விதித்த வரி 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதேபோல அமெரிக்க பொருள்களுக்கு சீனா விதித்த வரி 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. அத்துடன் முக்கியக் கனிமங்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் நீக்குவதாக சீனா உறுதி அளித்தது. எனினும் இந்தத் தற்காலிக வரிக் குறைப்பு உடன்பாட்டை பின்பற்றவில்லை என்று இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான புதிய வா்த்தக ஏற்பாடு தொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி, தற்போது சீனாவுடனான அமெரிக்காவின் வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனா, அமெரிக்கா

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப், “புதிய வா்த்தக ஏற்பாட்டின் கீழ், பூமியில் இருந்து கிடைக்கும் அரிய கனிமங்களும், காந்தங்களும் சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும். இதற்கு ஈடாக, அமெரிக்க தரப்பிலிருந்து சீனா விரும்புவதை அமெரிக்கா வழங்கும்.

மேலும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருள்கள் மீது அமெரிக்கா 55 சதவீத வரியும், சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருள்கள் மீது சீனா 10 சதவீத வரியும் விதிக்கும். அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சீன மாணவா்கள் படிக்க அனுமதிக்கப்படுவது உள்பட சீனாவுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்களை அமெரிக்கா செயல்படுத்தும்.. அமெரிக்க பொருள்களை சீனாவில் விற்பனை செய்வதற்கு இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து பணியாற்றும்” என தெரிவித்துள்ளார்.