வளர்ச்சிப் பாதையில் இருக்கும் பொருளாதாரங்களின் ஒரு கூட்டமைப்பே, பிரிக்ஸ் (BRICS) எனப்படுகிறது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன. இதற்கிடையே, 11 உறுப்பு நாடுகளுடன் விரிவுபடுத்தப்பட்ட ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் பிரேசில் தலைமை வகிக்கிறது. அதன்படி, இம்மாநாட்டை அந்த நாடு ரியோ டி ஜெனீரோ நகரில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
மறுபுறம், டாலரின் மதிப்பீட்டைக் குறைக்கவும், அதற்கு நிகராக பிரிக்ஸ் கூட்டணிக்கு என பொதுவான நாணய மதிப்பை உருவாக்கவும் பிரிக்ஸ் நாடுகள் உறுதியேற்றுள்ளன. இதற்கு தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால், பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அவர் பதவி ஏற்பதற்கு முன்பே எச்சரித்திருந்தார்.
சமீபத்தில்கூட, பிரதமர் மோடியைச் சந்தித்தபிறகு பேட்டியளித்த ட்ரம்ப், ”பிரிக்ஸ் அமைப்புக்கு கெஞ்சும் நிலை ஏற்படும். நான் குறிப்பிட்ட நாளிலேயே பிரிக்ஸ் செத்துவிட்டது” என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ”வரி அச்சுறுத்தலுக்குப் பிறகு பிரிக்ஸ் அமைப்பு உடைந்து நொறுங்கிவிட்டது” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பிரிக்ஸ் அமைப்பினர் அமெரிக்க டாலரை அழிக்க முயன்றனர். அவர்கள் ஒரு புதிய கரன்சியை உருவாக்க விரும்பினர். நான் அதிபராக பதவியேற்ற பிறகு டாலரை அழிக்க முயற்சி செய்யும் நாடுகளுக்கும் 150 சதவீதம் வரி விதிப்பேன் என எச்சரிக்கை விடுத்தேன். இதனால் தற்போது பிரிக்ஸ் அமைப்பு உடைந்து நொறுங்கிவிட்டது. வரி விதிப்பு அச்சுறுத்தலுக்குப் பிறகு பிரிக்ஸ் அமைப்பு பற்றி எந்த தகவலும் வரவில்லை. அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.