putin, trump  pt web
உலகம்

”மதுரோவைப்போல் புதினையும் தூக்குவீர்களா?” - அதிபர் ட்ரம்ப் சொன்ன பதில்!

'மதுரோவைப் போல புடினையும் பிடிப்பீர்களா' என்று அதிபர் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

Prakash J

'மதுரோவைப் போல புடினையும் பிடிப்பீர்களா' என்று அதிபர் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ட்ரம்ப் பதிலளித்துள்ளார். முன்னதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புதினை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவைக் கண்டு பல நாடுகளும் அச்சம் கொண்டுள்ளன. குறிப்பாக, கிரீன்லாந்து, ஈரான், கனடா உள்ளிட்ட நாடுகள் சற்றே அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு அவைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. இதற்கிடையே, 'மதுரோவைப் போல புடினையும் பிடிப்பீர்களா' என்று அதிபர் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "அதற்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன். அவருடன் (புதின்) நாம் ஒரு சிறந்த உறவைக் கொண்டிருப்போம் - எப்போதும் இருந்து வருகிறோம் - என்று நினைக்கிறேன்" எனப் பதிலளித்தார். முன்னதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, மதுரோ சம்பவத்திற்கு எதிர்வினையாற்றியபோது புதினைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டார், அவர், “ஒரு சர்வாதிகாரி இப்படித்தான் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அடுத்து என்ன செய்வது என்று அமெரிக்காவிற்குத் தெரியும்" என விமர்சித்திருந்தார். இதைவைத்தே, ட்ரம்பிடம் அந்தக் கேள்வி எழுப்பப்பட்டது.

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், நான்கு ஆண்டுகளை நெருங்கயிருக்கும் நிலையிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.