அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உள்நாடு தவிர்த்து உலக நாடுகளையும் நாள்தோறும் அச்சுறுத்தி வருகிறார். குடியேற்றக் கொள்கை, வரிவிதிப்பு, பாஸ்போர்ட் கெடுபிடி, நிதியுதவி நிறுத்தம், ஊழியர்கள் குறைப்பு, கனடா, கிரீன்லாந்து, காஸா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவர திட்டம் எனப் பல அதிரடி நடவடிக்கைகள் அவற்றுள் அடக்கம். தவிர, மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா எனவும் மாற்றினார். இதுதவிர, வேறு புதிய அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் அமெரிக்காவில் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நீண்டதூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான ’கோல்டன் டோம்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்கா, ஆயுதங்களை விண்வெளியில் வைக்கும். மேலும் இந்த திட்டத்திற்கு, அமெரிக்க விண்வெளிப் படை ஜெனரல் மைக்கேல் குட்லின் திட்ட மேலாளராக இருப்பார் எனவும் தெரிவித்துள்ள ட்ரம்ப், சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த லட்சிய பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கி இருப்பதாகவும், இதன்மூலம் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோல்டன் டோம் என்பது தரை மற்றும் விண்வெளி அடிப்படையிலான திறன்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமான தாக்குதலின் நான்கு முக்கிய நிலைகளிலும் ஏவுகணைகளைக் கண்டறிந்து நிறுத்த முடியும். கோல்டன் டோம் திட்டமானது, உள்வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து, கண்காணித்து, இடைமறிக்க செயற்கைக்கோள்களின் வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின்மூலம், ஏவுகணை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பிற்காக நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த முடியும்.
எனினும், இத்திட்டம் அரசியல் ஆய்வு மற்றும் நிதி நிச்சயமற்ற தன்மை இரண்டையும் எதிர்கொள்வதால், அதைச் செயல்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்த கோல்டன் டோம் திட்டம், இஸ்ரேலின் அயன் டோம் திட்டத்தை இன்ஸ்பிரேஷனாக கொண்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்குவதை எதிர்த்து ஈரான், ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எதிர் தாக்குதல்கள் நடக்கின்றன. அங்கிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்புகள் கொண்ட அமைப்பே, ‘அயன் டோம்’ என்று குறிப்பிடப்படுகிறது.