நவம்பர் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப அறிவித்துள்ளார்.
அதிபராகப் பொறுப்பேற்றது முதல், ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், வர்த்தகரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்குக் கிடைக்கவில்லை என்றும் கூறி வந்தார். இதையடுத்து இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் அதிக வரிவிதிப்பையும் மேற்கொண்டார். மேலும், பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதித்துள்ளார்.
இந்த நிலையில், “நவம்பர் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், “அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்து முக்கிய மென்பொருட்கள் மீதும் கடுமையான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் நிலையில், தற்போது மொத்தமாக சீனா மீது 130% வரி விதிக்கப்படுகிறது. ட்ரம்பின் இந்த அதிரடி முடிவால், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர்ப் பதற்றம் புதிய உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
இன்னொரு புறம், அடுத்த 2 வாரங்களில் தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங்கைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அவ்வாறு செய்வதற்கு எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். சீனா, அரிய வகை தனிமங்கள் மற்றும் உற்பத்தி தொடர்பான கிட்டத்தட்ட அனைத்தின் மீதும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க விரும்புவதாக உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பி மிகவும் விரோதமாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே, ட்ரம்ப் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், ட்ரம்ப்பின் இந்த புதிய வரி அறிவிப்பால், இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை மேலும் பாதிக்கக்கூடும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் சீன பொருட்கள் மீது ஏற்கெனவே 54 சதவீத வரி விதித்திருந்த ட்ரம்ப், மேலும் 50 சதவீத வரி விதித்தார். அதற்குப் பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா 84 சதவீத வரி விதித்தது. சீனாவின் பதிலடியால் கடும் கோபம் அடைந்த, அதிபர் ட்ரம்ப், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி 125 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து சீனா மீது மேலும் 20 சதவீத கூடுதல் வரிகளை ட்ரம்ப் விதித்தார். இதனால், சீனாவின் மொத்த வரி அப்போது 145 சதவிகிதமாக உயர்ந்தது. மறுபுறம், சீன பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக அதிகரித்தது. இதன்மூலம் அமெரிக்காவும் சீனாவும் பதிலுக்கு பதில் வரி விதிப்பது தொடர்கதையான நிலையில், இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் இருதரப்பிலும் 115% வரியைக் குறைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இறுதியில், சீனாவின் 145% மீது அமெரிக்க விதித்த வரியில் 30% சதவிகிதமாகக் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், அமெரிக்கப் பொருட்களுக்கான 125% சீன வரிகள் 10% ஆகக் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நடைமுறைதான் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.