செய்தியாளர் ஜி.எஸ்.பாலமுருகன்
உக்ரைன் போர் முடிவுக்கான புதிய அணுகுமுறையாக, டிரம்ப் - புடின் சந்திப்பு முயற்சி தீவிரமடைந்துள்ளது. உலக நாடுகள் கவனிக்கும் முக்கிய அரசியல் நிகழ்வாக அமையக்கூடிய, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இடையேயான நேரடி சந்திப்பு, வரும் வாரம் நடைபெறும் என பல்வேறு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த சந்திப்பின் மூலம், உக்ரைன் போருக்கான முடிவை நோக்கி ஒரு முக்கிய முயற்சி ஆரம்பிக்கப்படலாம் எனத் தெரிகிறது. முன்னணி சர்வதேச ஊடகச் செய்திகளின்படி, இந்த சந்திப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் (UAE) நடைபெறும் வாய்ப்பு அதிகம் என தெரிய வருகிறது. ட்ரம்ப் தரப்பு வலியுறுத்தும் இந்த சந்திப்பை, ரஷ்யாவும் ஏற்கலாம் எனக் கூறப்படுகிறது. இத்தகைய மாற்றம், அமெரிக்கா - ரஷ்யா இடையேயான நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், சமாதான முயற்சியின் மையவாயிலாகவும் அமையக்கூடும் என தெரியவருகிறது.
இரு தலைவர்களும் நேரடியாக சந்திக்க விரும்புவதாகவும், அந்த பேச்சுவார்த்தைகள் உக்ரைன் யுத்தத்துக்குத் தீர்வைக் காணும் புதிய அரசியல் திசையை உருவாக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மேற்கத்திய நாடுகள் மற்றும் உக்ரைன் அரசு, இந்த சந்திப்பு ஒரு முறைகேடு அல்லது புறக்கணிப்பு முயற்சியாக மாறக்கூடுமோ என்று கவலை தெரிவித்துள்ளன. உலகத்தின் வருங்கால அமைதி நிலைமை மற்றும் இந்தியா உள்ளிட்ட வணிக, பாதுகாப்பு சமத்துவங்களின் சூழ்நிலை மாற்றத்திற்கான சாத்தியத்தை ட்ரம்ப் - புடின் சந்திப்பு தீர்மானிக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.