america pt web
உலகம்

அமெரிக்காவில் அதிகரிக்கும் இந்தியர்களின் ஆதிக்கம்.. ட்ரம்ப் ஆட்சியில் புதிய கதவுகள் திறக்குமா?

அமெரிக்காவின் புதிய யூதர்கள் என இந்தியர்கள் அழைக்கப்படுகின்றனர். அந்தளவிற்கு அந்நாட்டின் பல்வேறு துறைகளிலும் இந்தியர்கள் ஆதிக்கம் கொடி கட்டிப்பறக்கிறது.

PT WEB

செய்தியாளர் சேஷகிரி

அமெரிக்காவின் புதிய யூதர்கள் என இந்தியர்கள் அழைக்கப்படுகின்றனர். அந்தளவிற்கு அந்நாட்டின் பல்வேறு துறைகளிலும் இந்தியர்கள் ஆதிக்கம் கொடி கட்டிப்பறக்கிறது. இந்த சூழலில் ட்ரம்ப்பின் புதிய ஆட்சிக்காலத்தில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது கவனம் பெறுகிறது.

இந்தியா - அமெரிக்கா

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 1.5%. மக்கள் தொகையில் குறைந்த பங்களிப்பே இருந்தாலும் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை இந்தியர்கள் வழங்குவதாக கூறுகிறது பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ஆய்வு.

அமெரிக்காவின் முன்னணி 500 நிறுவனங்களில் 16 நிறுவனங்களை வழிநடத்திச்செல்வது இந்தியர்கள்தான். இந்நிறுவனங்கள் 27 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடியவை. அமெரிக்காவின் 648 புத்தாக்க நிறுவனங்களில் 72 நிறுவனங்களை நிறுவியவர்கள் இந்தியர்கள். அமெரிக்க விடுதிகளில் 60% வைத்திருப்பது இந்தியர்கள். அமெரிக்க அரசிற்கு வருமான வரி செலுத்துவதில் இந்தியர்களின் பங்களிப்பு 5 - 6%.

கமலா ஹாரிஸ்

அரசுத் துறைகளில் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபர் என்ற நிலை வரை சென்றுவிட்டார். தற்போது துணை அதிபரின் மனைவியும் ஓர் இந்தியர்தான் தற்போது தனது ஆட்சியிலும் இந்தியர்களுக்கு முக்கிய பணிகளை ஒதுக்கியுள்ளார் ட்ரம்ப். அமெரிக்க காவல் துறையான FBIன் இயக்குநராக கஷ்யப் பட்டேல், தேசிய உளவுப் பிரிவின் இயக்குநராக துளசி கப்பார்டு, அமெரிக்க அரசின் மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன், அரசின் திறன் செயல்பாட்டுத்துறை இணைத் தலைவராக விவேக் ராமசாமி என ஒரு பெரும் இந்திய பட்டாளமே அமெரிக்காவை நிர்வகிக்கும் குழுவில் உள்ளது.

இது தவிர ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமி பெரா, ரோ கன்னா, ஸ்ரீ தனேதர், பிரமிளா ஜெயபால், சுஹாஸ் சுப்பிரமணியம் ஆகிய 6 இந்திய வம்சாவளியினரும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர்.

சுந்தர் பிச்சை

தொழில்துறையை பொருத்தவரை ஆல்ஃபாபெட் தலைமை அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்டின் தலைமை அதிகாரியாக சத்யா நாதள்ளா ஆகியோர் உள்ளனர். அடோப்புக்கு சாந்தனு நாராயண், ஐபிஎம்முக்கு அரவிந்த் கிருஷ்ணா, யூ டியூப்புக்கு நீல் மோகன், கூகுள் கிளவ்டுக்கு தாமஸ் குரியன் தலைமை அதிகாரிகளாக உள்ளனர். அமெரிக்க அரசு கொடுத்துள்ள h1B விசாக்களில் 5இல் ஒரு பகுதியை இந்திய நிறுவனங்கள் மட்டுமே கைப்பற்றியிருப்பது அங்கு இன்ஃபோசிசும் ஹெச்.சி.எல்லும், டி.சி. எஸ்சும் பெற்றுள்ள முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது.

மருத்துவம், கல்வி, கலை என வேறு பல பிரிவுகளிலும் இந்தியர்களின் பங்களிப்பு சிறந்ததாகவே உள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்காவை கட்டமைப்பதில் யூதர்கள் முக்கிய பங்கு வகித்த நிலையில் தற்போது அந்த இடத்திற்கு இந்தியர்கள் வந்துவிட்டனர் என்ற கருத்தாக்கம் நிலவுகிறது. அமெரிக்காவில் இந்தியர்களின் எழுச்சி ட்ரம்ப்பின் ஆட்சியிலும் தொடர்வது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் புதிய கதவுகளை திறக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.