30 நிமிடப் போராட்டம்... 1 கோடி வேண்டும் .. சைஃப் அலி கான் வீட்டில் என்ன நடந்தது... FIR ரிப்போர்ட்..!
சைஃப் அலி கானை கத்தியால் குத்திய நபர், வீட்டுக்குள் இருந்த புகைப்படத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு பந்தராவில் இருக்கும் சைஃப் அலி கான் வீட்டுக்குள், அந்த நபர் எவ்வளவு நேரம் இருந்தார், எவ்வளவு பணம் கேட்டு மிரட்டினார் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பாலிவுட் வட்டாரத்தில் சைஃப் அலி கானின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. லாரென்ஸ் பிஷ்னாய் கும்பல் சல்மான் கானை மிரட்டியது; ஷாருக் கானுக்கு வந்த டெலிஃபோன் மிரட்டல்; இப்போது சைஃப் அலி கான் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் கொலை வெறித் தாக்குதல் என தொடர் தாக்குதலால் பாலிவுட் கதிகலங்கிப்போயிருக்கிறது.
சைஃப் அலிகானின் நான்கு வயதான மகனான ஜெஹாங்கீரை எலியம்மா பிலிப் என்பவர் தான் கவனித்துவருகிறார். 56 வயதான எலியம்மா பிலிப்பின் FIRல் இருந்து பல்வேறு தகவல்களை நம்மால் அறிய முடிகிறது.
சைஃப் அலி கானின் அப்பார்ட்மெண்ட் ஒரு இரண்டு தள அப்பார்ட்மென்ட். அதன் 11வது, 12வது தளத்தில் சைஃப் அலி கான் கரீனா கபூருடன் தங்கி வருகிறார். 11வது தளத்தில் மூன்று அறைகள் உள்ளன. இதில் ஒரு அறையில் சைஃப் அலிகான், கரீனா கபூர் தங்கியிருக்கிறார்கள். இன்னொரு அறையில் சைஃப் அலிகானின் 8 வயது மகன் தைமூரும், அவரைப் பார்த்துக்கொள்ளும் கீதாவும் இருக்கிறார்கள். மூன்றாம் அறையில் நான்கு வயது மகனான ஜெஹாங்கீர் இருக்கிறார். ஜெஹாங்கீரை 56 வயதான எலியம்மா ஃபிலிப், ஜூனு என இரு பணிப்பெண்கள் கவனித்து வருகிறார்கள்.
புதன் இரவு 11 மணிக்கு ஜெகாஹீங்கரை தூங்கவைத்துவிட்டு, அதே அறையில் இரு பணிப்பெண்களும் தூங்கியிருக்கிறார்கள். இரண்டு மணி அளவுக்கு ஜெஹாங்கீரின் அறையில் ஏதோ சத்தம் கேட்க எலியம்மா விழித்திருக்கிறார். அறை திறக்கப்பட்டு, பாத்ரூம் விளக்கு ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டு இருக்க, கரீனா கபூர் தான் குழந்தையைக் கவனிக்க வந்துள்ளதாக எண்ணியிருக்கிறார் எலியம்மா. ஆனால், அங்கு வேறு யாரோ ஒரு நபர் தொப்பியுடன் இருப்பதை நிழலை வைத்து கண்டுபிடித்துவிட்டார் எலியம்மா. பாத்ரூமிலிருந்து வெளியே வந்து , ஜெஹாங்கீரின் கட்டில் நோக்கி அந்த நபர் நகர்ந்திருக்கிறார்.
பதறிப்போன எலியம்மா கட்டில் நோக்கி நகர்ந்திருக்கிறார். 'கத்தாதே' என நபர் சைகை செய்யவும், இன்னொரு பணிப்பெண்ணான ஜூனு எழவும் சரியாக இருந்திருக்கிறது. ஏதாவது சத்தம் வந்தால், யாரும் இந்த அறையை விட்டு வெளியே செல்ல முடியாது என எச்சரித்திருக்கிறார் அந்த நபர். ’பணம் வேண்டும். ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும்’ என மிரட்டியிருக்கிறார்.
குழந்தையை நோக்கி எலியம்மா நகர, வலது கையில் வைத்திருந்த ஹேக்ஸா பிளேடை வைத்து எலியம்மாவின் இரண்டு கை விரல்களையும் காயப்படுத்தியிருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட இன்னொரு பணிப்பெண்ணான ஜூனு, அலாரத்தை அழுத்திவிட்டு குழந்தையுடன் வெளியே ஓடியிருக்கிறார். சத்தம் கேட்ட சைஃப் அலிகான் ஜெஹாங்கீர் அறைக்கு ஓடி வந்திருக்கிறார்.
தடுக்க முயன்ற சைஃப் அலி கானையும், இன்னொரு பணிப்பெண்ணான கீதாவையும் ஹேக்ஸா பிளாடால் காயப்படுத்தியிருக்கிறார். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் சைஃப் அலி கானை கடுமையாக தாக்கியிருக்கிறார் திருடர். இதில், ஒரு கத்தி சைஃப் அலிகானின் தண்டுவடத்தை பலமாக காயப்படுத்தியிருக்கிறது. ஆனாலும்,சைஃப் அலி கானும், கீதாவும் அந்த நபரை அறைக்குள் தள்ளிவிட்டு, மேல் மாடிக்கு சென்றுவிட்டார்கள். அதற்குள் வீட்டில் இருந்த மற்ற நான்கு பணியாட்களும் எழுந்து உள்ளே வந்திருக்கிறார்கள்.
இவர்கள் வந்து பார்த்தபோது, அறையில் இருந்து அந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் தப்பித்துவிட்டார் என்பதை கவனித்திருக்கிறார்கள். அந்த நபர் கறுப்பு நிற உடை அணிந்திருந்தார் என FIR குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.