செய்தியாளர் - M.மீரா
கிரீன்லாந்து தீவின் எதிர்காலம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் டென்மார்க் இடையே நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு டென்மார்க் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆர்டிக் பகுதி இணையும் முக்கிய இடத்தில் கிரீன்லாந்து தீவு அமைந்துள்ளது. கிரீன்லாந்து என்பது டென்மார்க்கின் காலணி நாடாக இருந்தது. ஆனால், 2009ஆம் ஆண்டு கிரீன்லாந்து சுயாட்சி பெற்றது. முழு சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக்கொள்ளவும் கிரீன்லாந்துக்கு உரிமை இருக்கும் நிலையில், டென்மார்க் வழங்கும் மானிய உதவிகளுக்காக அந்நாட்டை கிரீன்லாந்து சார்ந்திருக்கிறது.
சுருக்கமாக, டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக இருக்கும் கிரீன்லாந்தில் சுமார் 57,000 பேர் வசிக்கின்றனர். கனிம வளங்கள் நிறைந்த இந்தத் தீவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர விரும்புவதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார். ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்ற அவரது மிரட்டல், நேட்டோ நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகியவை கடந்த செப்டம்பர் மாதம் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்திற்கு டென்மார்க் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 109 எம்.பி.க்கள் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிராக யாரும் வாக்களிக்கவில்லை.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவப் பங்களிப்பு அதிகரிக்கும். குறிப்பாக, ட்ரம்ப் முன்மொழிந்துள்ள 'கோல்டன் டோம்' ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு (Golden Dome" missile defence system) அமைப்பை நிறுவவும் அமெரிக்காவுக்கு அனுமதி கிடைக்கும். அதேநேரத்தில், கிரீன்லாந்து மீதான டென்மார்க்கின் இறையாண்மையும், அங்குள்ள மக்களின் உரிமைகளும் இந்த ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கிரீன்லாந்து நாடாளுமன்றமும் ஏற்கெனவே இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. டென்மார்க் வெளியுறவு அமைச்சகம், ஒப்பந்த நடைமுறைகள் நிறைவடைந்ததாக அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்த பிறகு இது அமலுக்கு வரும்.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் பிரச்சினைக்கு முடிவல்ல; அமெரிக்காவின் செல்வாக்கு இனி அதிகரிக்கக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கனிம வளங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முடிவுகளில் அமெரிக்கா கூடுதல் செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.