தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக தங்கள் நாட்டு மக்கள் தொகை குறைந்து வருவதாக கூறியுள்ளது சீனா. 2024இல் மக்கள் தொகை 14 லட்சம் குறைந்து 140 கோடியே 8 லட்சமாக இருந்தது என்கிறது சீன அரசு. இந்தப் போக்கு சீனாவில் மட்டுமல்ல ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற பல நாடுகளிலும் காணப்படுகிறது.
63 நாடுகளில் மக்கள் தொகை உச்சத்தை தொட்டு கீழே இறங்கி வருவதாக கூறுகிறது ஐநாவின் புள்ளிவிவரம் ஒன்று. இந்தப் பட்டியலில் மேலும் 48 நாடுகள் அடுத்த 30 ஆண்டுகளில் சேரும் என்கிறது ஐநாவின் அறிக்கை. தற்போது உலகின் மக்கள் தொகை 820 கோடியாக உள்ளதாகவும் இது 60 ஆண்டுகளில் ஆயிரத்து 30 கோடி என்ற உச்சத்தை எட்டி அது பின்னர் சரியத் தொடங்கும் என்றும் ஐநா நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மக்கள் தொகை குறைவது என்பது முதியவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கிறது... துடிப்பாக உழைக்கும் வயதினர் எண்ணிக்கையை குறைக்கிறது. இது பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது. இதனால் அஞ்சும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மக்கள் தொகையை பெருக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. மக்கள் தொகை சரிவு மனித குலம் எதிர்கொள்ளும் பேராபத்து என எக்ஸ் தளத்தில் இடப்பட்ட பதிவுக்கு ஆம் என ஆமோதித்துள்ளார் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்.
இந்தியாவிலும் மக்கள் தொகை சரியும் போக்கு இன்னும் அரை நூற்றாண்டில் தொடங்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. மக்கள் தொகை குறைவு என்ற பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இந்தியாவில் முதல் தலைவராக குரல் எழுப்பியுள்ளார் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு. குழந்தைப்பேறு வாழ்க்கையின் தலையாய வரம் என்ற நிலை மாறி வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை சுவைக்க தடைக்கல் என மாறி வரும் மனப்பாங்கு மனித குலத்திற்கே மரண அடியாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை.