நரேந்திர மோடி Pt web
உலகம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல்! யார் இந்த அபு முஸ்தபா? தீவிர விசாரணையில் உளவுத்துறை

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா செல்லவிருக்கும் நிலையில், அவருக்கு ஆன்லைனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

மெல்போர்னில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் வரும் ஜூலை 9ஆம் தேதி இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்திக்கும் "மெல்போர்ன் மீட்ஸ் மோடி" நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்பான ஃபேஸ்புக் பதிவின் Comments section-இல், "அபு முஸ்தபா" என்ற பெயரிலான கணக்கிலிருந்து, "நிகழ்ச்சியின் போது மைதானத்தின் மேற்கூரையை மூடி வைப்பது நல்லது; இல்லையெனில் அவர் ஆஸ்திரேலியாவிற்கு வருவது அவரது மரணத்திற்காகத்தான் இருக்கும்" என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் - பிரதமர் மோடி

இந்த தகவல் உடனடியாக AFP அதாவது ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், மிரட்டல் பதிவுடன் தொடர்புடைய ஃபேஸ்புக் கணக்கின் ஐபி முகவரியை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மிரட்டலின் பின்னணி, அதன் உண்மைத்தன்மை மற்றும் இதில் ஏதேனும் குற்றவியல் குழுக்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆஸ்திரேலிய உளவுத்துறை மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதையடுத்து மார்வெல் ஸ்டேடியம் மற்றும் பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் AFP, விக்டோரியா மாநில காவல்துறை மற்றும் VVIP பாதுகாப்புப் பிரிவுகள் இணைந்து உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.

மிரட்டல் விடுத்த நபரின் அடையாளம் குறித்து ஆஸ்திரேலிய காவல்துறையோ அல்லது இந்திய தூதரகமோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஜூலை 8 முதல் 10 வரை நடைபெறும் பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா பயணத்திற்கான பாதுகாப்பு நெறிமுறைகளும் பலமடங்கு பலப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.