கடந்த ஜனவரி மாதம் ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ் என்ற பெயரில் அமெரிக்க ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டனர். வெனிசுலாவும் கியூபாவும் நெருங்கிய உறவுகளை பேணி வந்த நிலையில், கியூபாவின் எரிவாயு தேவையை வெனிசுலாவே நிறைவேற்றி வந்தது. ஆனால் வெனிசுலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு வந்தபின்னர் கியூபாவுக்கான எரிவாயு விநோயோகம் தடைபட்டு, அந்நாட்டு மாபெரும் மின்தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது.
இதனிடையே சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடனான விவகாரங்களை முதலில் முடித்துவிட்டு அதன்பின் கியூபாவின் பக்கம் கவனம் திரும்பும் என்று கூறியிருந்தார். மேலும் அமெரிக்கா தனது கவனத்தை கியூபாவுக்குத் திரும்புவது காலத்தின் கட்டாயம் என்றும், கியூபா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், அங்கு ஒரு நட்புரீதியான கையகப்படுத்துதல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனால் ஈரானில் போர் முடிந்த பின்னர் கியூபா மீது அமெரிக்கா படையெடுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், கியூபாவின் அதிபராக மிகுவேல் தியாஸ், அமெரிக்கா கியூபா மீது தாக்குதல் நடத்திநாள் அது அமெரிக்காவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
NBC செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா கியூபா மீது படையெடுத்தால் நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்வோம் என்றும், நாங்கள் சாக வேண்டியிருந்தால் சாவோம், ஏனென்றால் எங்கள் தேசிய கீதம் சொல்வது போல், தாய்நாட்டிற்காக இறப்பதே பெருமைக்குரியதாகும் என்று கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த எந்த முகாந்திரமும் இல்லை என்றும், அப்படி தாக்குதல் நடந்தால் எங்கள் நாட்டு மக்கள் தங்கள் உயிரையும் கொடுத்து தாய் நாட்டை காப்பாற்றுவார்கள் என்றும் கூறியுள்ளார்.