Russia has been weakened by the war Reuters
உலகம்

பயமா? ராஜதந்திரமா? கேள்விக்குறியாகும் புதினின் அறிவிப்பு!

புதினின் அறிவிப்பை தொடர்ந்து ரஷ்யா போரினால் பலவீனம் அடைந்துவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Praveen Joshva L

உக்ரைன்-ரஷ்யா போர் நான்காவது ஆண்டிலும் முடிவில்லாமல் நீளும் நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னர் மாஸ்கோவில் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர். இதையடுத்து கீவ் மீது 3 நாள் தாக்குதல் நிறுத்தம் அறிவித்த புதின் முடிவு, ரஷ்யாவின் பலவீனமா அல்லது அமெரிக்காவை தன் பக்கம் இழுக்கும் ராஜதந்திரமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து 4 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. தொடக்கத்தில் ரஷ்யாவின் விரைவான முன்னேற்றம் தடுக்கப்பட்டு, தற்போது இரு தரப்புக்கும் சாதகம் இல்லாமல் நிலுவை நிலையிலேயே போர் தொடர்ந்து வருகிறது.

உக்ரைனின் இரண்டு மாகாணங்களையும், முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், போர் நிறுத்தத்துக்கு இரண்டு தரப்பும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரஷ்யா கூடுதல் நிலப்பரப்பை கோரும் நிலையில், உக்ரைனோ ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை திரும்பத்தரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இருவரும் தங்கள் கோரிக்கையில் இருந்து பின்வாங்காத நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையாமல் உள்ளது. போரில் உக்ரைன் தொடர்ந்து செயல்பட அமெரிக்காவின் உதவி முக்கியம் என்பதால் இந்த போரில் அமெரிக்காவின் ஆதரவை பெற ரஷ்யாவும், அதனை தக்கவைக்க உக்ரைனும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளனர்.

இவர்களின் பயணத்தை முன்னிட்டு உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை 3 நாட்கள் நிறுத்திவைப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். அதே போல உக்ரைன் தரப்பில், அமெரிக்க தூதர்கள் பாதுகாப்பாக வந்து செல்ல ஏதுவாக எங்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான வான்வழித் தாக்குதல்களும் நடத்தப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னர் அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன் உக்ரைனுக்கு சென்றபோது, அவர் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்த போதே ரஷ்யா தாக்குதல் நடத்தியது. அப்படிப்பட்ட நிலையில், அமெரிக்க தூதர்கள் வருகைக்காக தற்போது தாக்குதலை புதின் நிறுத்தியுள்ளதை ஒரு தரப்பின் ரஷ்யாவின் பலவீனம் என்றும், மற்றொரு தரப்பினர் அமெரிக்காவை தங்கள் பக்கம் இழுக்க ரஷ்யா மேற்கொண்ட ராஜதந்திரம் என்றும் கூறி வருகின்றனர்.