பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த இளம் ஜோடி தங்கள் வீட்டின் எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது..இந்த திருமணத்தை விரும்பாத பெண்ணின் சகோதரர் பழங்குடியினத் தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து பழங்குடியினத் தலைவர் உத்தரவின் பேரில் புதுமண தம்பதியயை குவெட்டாவின் பாலைவனப் பகுதிக்கு டிரக்கில் தூக்கிச் சென்றுள்ளனர்..இருவரையும் கீழே இறக்கிவிட்ட மர்ம கும்பல் ஒன்று தம்பதியின் தலையில் கொடூரமாக 3 முறை சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சி வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் 14 பேரை கைது செய்துள்ளனர். இதில், ஆணவக்கொலைக்கு உத்தரவிட்ட உள்ளூர் பழங்குடியினத் தலைவர் ஷேர் பாஸ் சதசாயும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆணவக்கொலை சம்பவம் பலுசிஸ்தான் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது குறித்து பேசிய பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி, “ஒருவரை சுட்டுக்கொன்று அதனை வீடியோவாக பதிவு செய்வது மனிதத் தன்மையற்ற செயல். ஒரு உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.. இது, ஒரு வேதனையான நிகழ்வு..இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என கூறியுள்ளார்.