குஸ்டாவோ ஃபெட்ரோ எக்ஸ் தளம்
உலகம்

”அமெரிக்க வேலையை விட்டுவிட்டு நாடு திரும்புங்கள்” - கொலம்பிய அதிபர் வேண்டுகோள்!

அமெரிக்க வேலையை விட்டுவிட்டு நாடு திரும்ப புலம்பெயர்ந்த மக்களுக்கு கொலம்பிய அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Prakash J

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையும் ஒன்று. அதாவது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சட்டவிரோதமாக அங்கு குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருந்த கொலம்பியர்களை கொலம்பியாவுக்கு நாடு கடத்த ட்ரம்ப் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நாடு கடத்தப்பட்ட குடியேறிகளை ஏற்றிவந்த இரு விமானங்களை கொலம்பியாவில் தரையிறக்க அந்நாட்டு அதிபர் அனுமதி அளிக்கவில்லை.

ட்ரம்ப், குஸ்டாவோ ஃபெட்ரோ

குடியேறிய மக்களை பொது விமானங்கள் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும் என்றும் ராணுவ விமானங்களில் அனுப்ப அவர்கள் குற்றவாளிகள் இல்லை” என்றும் அதிபர் குஸ்டாவோ ஃபெட்ரோ தெரிவித்திருந்தார். இதன் காரணமாகக் கோபமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொலம்பிய இறக்குமதிகள் மீதான 25% வரியை அதிகரித்து பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினார். பதிலுக்கு கொலம்பியாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 25% ஏற்றுமதி வரி உயர்வை அறிவித்தது. உடனே மீண்டும் ட்ரம்ப், கொலம்பிய பொருட்களுக்கான சுங்க ஆய்வுகளை மேம்படுத்துதல், அந்நாட்டு அதிகாரிகள் மீதான விசா கட்டுப்பாடுகளை அறிவித்தார். இதனால் அடிபணிந்த கொலம்பியா, நாடு கடத்தப்பட்ட குடியேறிகளை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது. இதையடுத்து, கொலம்பியா மீதான 25% வரி விதிப்பை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள கொலம்பியா நாட்டு மக்கள் அந்நாட்டிலுள்ள பணியைத் துறந்துவிட்டு தாயகம் திரும்புமாறு அதிபர் குஸ்டாவோ ஃபெட்ரோ அழைப்பு விடுத்துள்ளார்.

ட்ரம்ப்,

இதுகுறித்து இடதுசாரி அதிபரான குஸ்டாவோ தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கொலம்பியா நாட்டு மக்கள் அமெரிக்காவிலுள்ள தங்களது பணியை விட்டுவிட்டு தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டும். செல்வம் உழைக்கும் மக்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. கொலம்பியாவில் ஒன்றாக இணைந்து சமூக செல்வத்தை கட்டியெழுப்புவோம். இந்த அழைப்பை ஏற்று கொலம்பியாவிற்கு திரும்பும் அந்நாட்டு மக்கள் அரசு அறிவித்துள்ள திட்டங்களில் இணைந்து தொழில் தொடங்கினால் குஸ்டாவோவின் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது.