தென் அமெரிக்காவில் அமைந்துள்ள கொலம்பியாவில், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு இப்போது முதலே பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், கொலம்பிய செனட்டரான மிகுவல் யூரிப், 2026 அதிபர் தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஜனநாயக மையக் கட்சியைச் சேர்ந்த மிகுவல் யூரிப், தலைநகர் போகோடாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வின்போது, அதாவது கடந்த ஜூன் 7ஆம் தேதி பொது பூங்காவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
"நீ இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள எனக்கு வழி காட்டும்படி கடவுளிடம் கேட்டுக்கொள்கிறேன். அமைதியாக இருங்கள், என் வாழ்க்கையின் அன்பே, நம் குழந்தைகளை நான் கவனித்துக்கொள்வேன்"மரியா கிளாடியா டராசோனா
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பின்னால் இருந்து அவரைச் சுட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மிகுவல் யூரிப், உயிரிழந்தார். ஆகஸ்ட் 11ஆம் தேதி காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதை, அவருடைய மனைவி மரியா கிளாடியா டராசோனா சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர், தனது பதிவில், "நீ இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள எனக்கு வழி காட்டும்படி கடவுளிடம் கேட்டுக்கொள்கிறேன். அமைதியாக இருங்கள், என் வாழ்க்கையின் அன்பே, நம் குழந்தைகளை நான் கவனித்துக்கொள்வேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
யூரிபின் மரணம், அவரது குடும்பத்தின் துயரமான வரலாற்றில் மேலும் சோகத்தைச் சேர்த்துள்ளது. யூரிபின் தாயாரும் பத்திரிகையாளருமான டயானா டர்பே, 1991ஆம் ஆண்டு போதைப்பொருள் தலைவன் பாப்லோ எஸ்கோபார் தலைமையிலான மெடலின் கார்டெல்லால் கடத்தப்பட்டு, பின்னர் ஒரு தோல்வியுற்ற மீட்புப் பணியின்போது கொல்லப்பட்டார். கொலம்பிய அரசியலில் யூரிபின் குடும்பம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது தாய்வழி தாத்தா ஜூலியோ சீசர் டர்பே 1978 முதல் 1982 வரை கொலம்பியாவின் அதிபராக இருந்தவர். அதேநேரத்தில், அவரது தந்தைவழி தாத்தா ரோட்ரிகோ யூரிப் எச்சாவர்ரியா லிபரல் கட்சிக்குத் தலைமை தாங்கினார் மற்றும் விர்ஜிலியோ பார்கோவின் வெற்றிகரமான 1986 அதிபர் பிரசாரத்தை ஆதரித்தார்.
25 வயதிலேயே போகோடாவின் நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட யூரிப், அங்கு அவர் அப்போது தலைநகரின் மேயராக இருந்த பெட்ரோவின் முக்கிய எதிர்ப்பாளராக இருந்தார். கழிவு மேலாண்மை மற்றும் சமூகத் திட்டங்களை அவர் கையாள்வதைக் கடுமையாக விமர்சித்தார். 2022 சட்டமன்றத் தேர்தல்களில், ’கொலம்பியா முதலில்’ என்ற முழக்கத்துடன் ஜனநாயக மையக் கட்சிக்கான செனட் இடத்தை வழிநடத்திய யூரிப், சபையில் ஓர் நிரந்தர இடத்தைப் பெற்றார். பின்னர், வலதுசாரி ஜனநாயக மையக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், இடதுசாரி அதிபர் குஸ்டாவோ பெட்ரோவின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்ததற்காகவும் அறியப்பட்ட யூரிப், தற்போது அதிபர் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டார்.