குழந்தைகளுக்கான காலநிலை இடர் அறிக்கை UNICEF
உலகம்

குழந்தைகளுக்கான காலநிலை இடர் அறிக்கை 2026.. அனைத்து குழந்தைகளும் ஆபத்தில்.. யூனிசெஃப் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் வாழும் கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளும் குறைந்தபட்சம் ஒரு காலநிலை ஆபத்துக்காவது ஆளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப் (UNICEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.

Premkumar S

காலநிலை மாற்றத்தின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், குழந்தைகளின் உடல்நலம், கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருவதாக குழந்தைகளுக்கான காலநிலை இடர் அறிக்கை 2026 சுட்டிக்காட்டியுள்ளது. யூனிசெஃப் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதும் வாழும் கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளும் குறைந்தபட்சம் ஒரு காலநிலை ஆபத்துக்காவது ஆளாகியுள்ளதாகவும், சுமார் 110 கோடி குழந்தைகள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துகளை ஒரே நேரத்தில் எதிர்கொண்டு வருவதாகவும், 40 லட்சத்திற்கும் அதிகான குழந்தைகள் 6-க்கும் மேற்பட்ட காலநிலை இடர்களை எதிர்கொண்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளின் உடல் மற்றும் மனநல வளர்ச்சியில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்திருக்கிறது.

குழந்தைகளுக்கான காலநிலை இடர் அறிக்கை

மேலும் இந்த அறிக்கையில், உலகளவில் சுமார் 180 கோடி குழந்தைகள் வறட்சி பாதிப்புகளுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர். 120 கோடி குழந்தைகள் கடுமையான வெப்ப அலைகளின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறு, வெள்ளப்பெருக்கு, புயல், காட்டுத்தீ, நீர் பற்றாக்குறை மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் குழந்தைகளின் வாழ்க்கையை பாதித்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், காலநிலை மாற்றம் உலகலாளவிய நிகழ்வாக இருந்தாலும், அனைத்து நாடுகளிலும் சமமாக உணரப்படவில்லை என்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் குழந்தைகள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் அதிகமாக பாதிக்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது. போதுமான சுகாதார வசதிகள், பாதுகாப்பான குடிநீர் மற்றும் தரமான கல்வி வாய்ப்புகள் இல்லாத பகுதிகளில் வாழும் குழந்தைகள் மிகுந்த ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Unicef

காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் வெப்பநிலை உயர்வு, இயற்கை பேரிடர்களின் அதிகரிப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகள் குழந்தைகளின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் முக்கிய காரணிகளாக மாறியுள்ளன. இதனால், உலக நாடுகள் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், குழந்தைகளை மையமாகக் கொண்ட காலநிலை பாதுகாப்பு திட்டங்களில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் யூனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.

காலநிலை மாற்றம் என்பது இனி சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; அது குழந்தைகளின் உரிமைகள் மற்றும் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும் உலகளாவிய மனிதாபிமான சவாலாக மாறிவிட்டதாக அறிக்கை எச்சரித்துள்ளது.