அமெரிக்காவில் கடந்த 2001 செப்டம்பர் 11 அன்று, அல்-கொய்தா பயங்கரவாதிகள் நான்கு பயணிகள் விமானங்களை கடத்தினர். அவற்றில் இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உலக வர்த்தக மையத்தை தாக்கின. அதில், முதல் விமானம் நார்த் ட்வர் என்று சொல்லப்படும் கட்டடத்தையும், இரண்டாவது விமானம் சவுத் டவரை 9.03 மணிக்கு தாக்கியது.
அடுத்ததாக மூன்றாவது விமானம் அமெரிகாவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் (The Pentagon) மீது மோதியது. நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள நாடாளுமன்றக் கட்டத்தை தாக்க முயற்சித்தபோது வயலில் விழுந்து நொறுங்கியது. இந்த தாக்குதல்களில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவங்களே நைன் லெவன் என அழைக்கப்படுகிறது.
இந்த தாக்குதலின் முக்கிய திட்டமிடுபவராக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிடும் நபர் காலித் ஷேக் முகமது. ஆனால், அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், காலித் பற்றிய தகவல்கள் அமெரிக்க உளவுத்துறைக்கு நைன் லெவன் தாக்குதலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நியூஸ் வீக் அறிக்கைபடி, 1993-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ரம்ஸி யூசப்புடன் (Ramzi Yousef) காலித்-க்கு தொடர்பு இருந்ததாக அமெரிக்காவின் உளவு அமைப்பானா CIA-வுக்கு தெரிந்திருந்தது. இதன் அடிப்படையில், 1996 ஜனவரியிலேயே காலித் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதே ஆண்டில் அவரை கத்தாரிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வர முயற்சியும் தோல்வியடைந்தது.
இந்தச்சூழலில் தான், நைன் லெவன் தாக்குதலில் முக்கியமான “முக்தார்” என்ற பெயர் CIA-வின் உளவுத்துறை அறிக்கைகளில் இடம்பெறுகிறது. 2001-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே, “முக்தார்” என்ற பெயரைப் பயன்படுத்தும் ஒருவர், அமெரிக்காவை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை ஆட்சேர்ப்பு செய்து பயிற்சி அளித்து வருவதாக CIA-க்கு பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக நியூஸ் வீக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ஆகஸ்ட் 28-ம் தேதி CIA-வின் கவுண்டர் டெரரிஸ்ட் சென்டர் (Counterterrorist Center)-க்கு கிடைத்த மனித உளவுத் தகவலில், “முக்தார்” என்ற பெயர் காலித்-உடன் தொடர்புடையது என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கேதான் மிகப்பெரிய கேள்வி எழுகிறது. CIA-விடம் ஒருபுறம் காலித் பற்றிய பழைய தகவல்கள் இருந்தன. இன்னொருபுறம் “முக்தார்” என்ற பெயரில் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த தயாராகும் நபர் பற்றிய தகவல்கள் இருந்தன. ஆனால், இந்த இரண்டு தகவல்களும் ஒரே நபரைப் பற்றியது என்பதை தாக்குதலுக்கு முன்பு CIA கண்டறியவில்லை.
அதாவது, தடயங்கள் இருந்தும் அவற்றை ஒன்றாக இணைத்து முழுமையான படத்தை உருவாக்க முடியவில்லை. 9/11 தாக்குதலுக்குப் பிறகுதான் இந்த தகவல்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, “முக்தார்” என்பது காலித்-ஐ குறிக்கும் பெயர் என்பது தெளிவானதாக கூறப்படுகிறது.
இதனால், 9/11 தாக்குதலுக்கு முன்பு அமெரிக்க உளவு அமைப்புகளிடம் இருந்த தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்பட்டன, அவை ஏன் ஒன்றோடொன்று இணைக்கப்படவில்லை. மேலும் அந்த தகவல்களை வைத்து தாக்குதலைத் தடுக்க முடியுமா? என்ற கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. எனினும், நைன் லெவன் தாக்குதல் நடைபெற்று 25 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் இந்த சூழலில், நியூஷ் வீக் அறிக்கை பேசுபொருளாகியிருக்கிறது.