காதலர்கள் தங்கள் துணையின் மனங்களைக் கவர பல்வேறு புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த காதலர் ஒருவர் தன் காதலியைக் கவர வித்தியாசமாக முயன்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லியு. இவருடைய காதலர், லியுவைக் கவரும் வகையில் கேக் ஒன்றை அவரே தயார் செய்துள்ளார். மேலும், காதலி லியுவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தங்க மோதிரம் ஒன்றையும் அந்த கேக்கிற்குள் வைத்துள்ளார். காதலியிடம் விவரத்தைச் சொல்லி அவரைத் தன் வீட்டுக்குள் வரவழைத்துள்ளார். வீட்டுக்கு வந்த காதலியிடம் அந்த கேக்கைக் கொடுத்துள்ளார். அவரும் ஆசை ஆசையாய்ச் சாப்பிட்டுள்ளார். அப்போது அவரது வாயில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது. இதனால், அந்த கேக்கின் தரம் சரியில்லை என உணர்ந்துள்ளார்.
அதன்பின், சுதாரித்து அதை வெளியில் எடுத்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. ஆம், காதலர் சர்ப்ரைஸாக வைத்த அந்த தங்க மோதிரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன், மேலும் ஆனந்தமடைந்துள்ளார். இதனால், அவர்களுடைய காதல் புரோபோசல் நிகழ்வு மேலும் கலகலப்பானது. இந்த மறக்க முடியாத சம்பவத்தை, லியு தனது வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.