No.1 Youtuber-க்கு விரைவில் திருமணம்.. மோதிரம் மாற்றி காதலை உறுதிசெய்த காதலர்!
இன்று உலகம் முழுவதும் மக்களை வளைத்துப் போட்டிருப்பதில் சமூக வலைதளங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் யூடியூப் என்ற சேனல் முதலிடத்தைப் பெறுகிறது. இந்த சேனலில் பலரும் தங்களுடைய வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ’மிஸ்டர் பீஸ்ட்’ என்ற யூடியூப் சேனலே தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சேனல், தற்போது வரை 34 கோடி சந்தாதாரர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை, ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் தியா பூய்சென் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக ஜிம்மி டொனால்ட்சன் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தன்று தியா பூய்செனுக்கு ஜிம்மி டொனால்ட்சன் மோதிரத்தை நீட்டி தனது காதலை தெரிவித்துள்ளார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டதால் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்துகொண்டனர்.
நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் ஜிம்மி டொனால்ட்சன் பகிர்ந்துள்ளார். அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்த ஜோடியின் திருமணமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தியா பூய்சென், “இது எங்களின் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. என்னைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கெனவே திருமணமானவர்கள். இந்த விஷயங்கள் குறித்து நாங்கள் ஏற்கெனவே ஒரே பக்கத்தில் இருக்கிறோம். நாங்கள் குழந்தைகளைப் பற்றி பேசுகிறோம், நாங்கள் 70 வயதில் எப்படி ஒன்றாக வாழப் போகிறோம். இது செயல்பாட்டில் மற்றொரு படியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தியா பூய்சென், ஓர் எழுத்தாளர் ஆவார். அவர், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், Stellenbosch பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் சட்டம் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.