AI Created image TOI
உலகம்

“குழந்தைகள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்” Hardship Camp-க்கு அனுப்பும் சீன பெற்றோர்!!

சீன நகர்ப்புறங்களில் சில பெற்றோர்கள் கோடை விடுமுறையில் குழந்தைகளை ‘Hardship Camp’ எனப்படும் கடின உழைப்பு முகாம்களுக்கு அனுப்பி, விவசாய வேலை, விறகு வெட்டுதல், பன்றிகளுக்கு உணவு கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்துகின்றனர்.

Premkumar S

கோடை விடுமுறை என்றாலே வீடியோ கேம்ஸ் விளையாடுவது, நண்பர்களுடன் பொழுதுபோக்குவது என குழந்தகளுக்கு சந்தோஷம்தான். ஆனால், சீனாவில் நகர்புறங்களில் வாழும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முற்றிலும் வித்தியாசமான விடுமுறையை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அவர்கள், குழந்தைகளை “Hardship Camp” எனப்படும் கடின உழைப்பு முகாம்களுக்கு அனுப்புகின்றனர். இந்த முகாம்களில் குழந்தைகள் விவசாய வேலைகள் செய்வது, உருளைக்கிழங்கு தோண்டுவது, மரப்பட்டைகளை உரிப்பது, பன்றிகளுக்கு உணவு கொடுப்பது, விறகு வெட்டுவது போன்ற வேலைகளை செய்ய வேண்டும்.

Model Image

இதற்காக பெற்றோர்களே ஆயிரக்கணக்கான யுவான்களை கட்டணமாக செலுத்துகின்றனர். ஒரு முகாமில் 10 நாட்கள் பயிற்சிக்கு 4 ஆயிரம் யுவானுக்கும் மேல், அதாவது சுமார் 56 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மாதம் வரை நீடிக்கும் முகாம்களுக்கு 10 ஆயிரம் யுவானுக்கும் அதிகமாக, அதாவது சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.

இந்த முகாம்களில் கடுமையான நடைமுறைகளும் உள்ளன. சில இடங்களில் குழந்தைகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவர்கள் செய்யும் வேலையின் அடிப்படையில் உணவு மற்றும் பிற பொருட்கள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த முகாம்களின் நோக்கம் குழந்தைகளை தண்டிப்பது அல்ல என ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். வசதியான வாழ்க்கையில் வளரும் குழந்தைகளுக்கு, உணவு மற்றும் அன்றாட தேவைகளுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பை புரிய வைப்பதே இதன் நோக்கம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்த முகாம்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சர்ச்சையும் எழுந்துள்ளது. சில குழந்தைகள் கடினமான வேலைகளை செய்ய முடியாமல் அழுவதும், தங்களை வீட்டுக்கு அனுப்புமாறு கேட்பதும் வீடியோக்களில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கு பொறுப்பு, சுயசார்பு மற்றும் உழைப்பின் மதிப்பை கற்றுக்கொடுப்பது அவசியம்தான். ஆனால், அதற்காக குழந்தைகளை அதிக உடல் உழைப்புக்கும் மன அழுத்தத்திற்கும் உட்படுத்துவது சரியா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். இந்தச்சூழலில் தான், சீனாவின் இந்த “Hardship Camps” தற்போது பேசுபொருளாகியிருக்கின்றன.