சிறிய நிறுவனங்கள் தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இப்படி அதிகரித்து வரும் வேலையின்மை பலரின் மத்தியில் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படியான சூழலில்தான், சீனாவில் வேலையின்மையை மறைப்பதற்காக ஒரு புதுவித யுக்தியை கண்டறிந்து வியப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.
சீனாவில் ஹெப்பி மாகாணத்தில் ஒரு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு நாளைக்கு 30 யுவான் (இந்திய மதிப்பில் 350 ரூபாய்) என வாடகைக்கு அலுவலகத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்படி, தினசரி 30 யுவான் கட்டி, காலை தொடங்கி மாலை வரையிலும் அந்த அலுவலகத்திலேயே இருக்கலாம். அங்கு வேலை செய்துவருவது போல காட்டிக்கொள்ளலாம். இங்கு வருவோருக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது.
மேலும், வேலை செய்வது போல பில்டப் செய்து ‘பாஸ்’ போல் போட்டோ எடுக்க வேண்டுமெனில், கூடுதலாக 50 யுவான் வசூலிக்கப்படுவதாகவும் வைரலான பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில், ஜூன் 2023 இல் 16-24 வயதிற்குட்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் 21.3 சதவீதத்தை எட்டியது வேலையின்மை குறித்தான ஒரு முக்கியமான கவலையாக ஏற்படுத்தி இருப்பதால், இதுபோன்ற புது யுக்தி கையாளப்படுவதாக கூறப்படுகிறது.
இதுக்குறித்தான பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை தூண்டியுள்ளது. மேலும்,100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. ஒரு புறம் இதற்கு ஆதரவு கிளம்பினாலும , மற்றொரு புறமும் இது விவாதத்தையும் பெற்றுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் வேலையின்மையை ஊக்குவிப்பதாகவும், தாமதப்படுத்துவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.