உலகம் முழுவதும் மக்களைப் பாதுகாக்கும் பணியில் காவல் துறை சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்தக் காவல் துறைக்கு உறுதுணையாக நாய்களின் பங்களிப்பும் உள்ளது. அந்த வகையில், சீனாவில் காவல் துறையில் உள்ள நாய் ஒன்று, தன் கடமையின்போது தூங்கியதற்காக அதன் வருடாந்திர ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டு உள்ளது. சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வெயிஃபாங்கில் உள்ள போலீஸ் நாய் பயிற்சித் தளத்தில், வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கும் நாயாக, இதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஃபுசாய் என்ற பெயர் கொண்ட இந்த நாய்க்குட்டி, கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி பிறந்தது. மேலும், இது தனது அழகான சிரிப்பு மற்றும் கண்டறிதல் திறன் மூலம் இணையத்தில் வைரலானது. இதன் அசாத்திய திறமை, சீனாவின் காவல் துறையையும் கவர்ந்தது. இதைப் பராமரித்து வந்த சாங்கிள் கவுண்டி பொதுப் பாதுகாப்புப் பணியகத்தைச் சேர்ந்த பயிற்சியாளரான ஜாவோ கிங்சுவாய், அதை போலீஸுக்கு நன்கொடையாக வழங்கினார். இதையடுத்து, அந்த நாய்க்குட்டி, 4 மாத குழந்தையாக இருந்தபோது போலீஸ் பயிற்சி மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதற்கு மேலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் வைத்த அனைத்துப் பயிற்சியிலும் வெற்றிபெற்று, தற்போது முழுநேரம் பணியாற்றும் மோப்ப நாய் அந்தஸ்து பிரிவில் இடம்பெற்றது.
இதன் சாதனைகள் மற்றும் அன்றாட நிகழ்வுகள் Weifang என்ற பொதுப் பாதுகாப்பு பணியகத்தால் நிர்வகிக்கப்படும் ’Corgi Police Dog Fuzai மற்றும் அதன் தோழர்கள்’ என்ற சமூக ஊடகக் கணக்கில் தொடர்ந்து பகிரப்படுகின்றன. 3,84,000க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்தக் கணக்கைப் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில், தன் கடமையின்போது தூங்கியதற்காகவும், தனது உணவுக் கிண்ணத்திலேயே சிறுநீர் கழித்ததற்காகவும் அதனுடைய வருடாந்திர ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அபராதமாக அதன் தின்பண்டங்களும் அகற்றப்பட்டிருப்பதாக சீன நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், இந்த நாய்க்குட்டி, சந்திர புத்தாண்டு பரிசு வெகுமதியைப் பெற்றிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.