J-20 - மைட்டி டிராகன்  Pt web
உலகம்

இந்தியா - சீனா போர் ஏற்பட்டால் என்ன நடக்கும்? புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!!

இந்தியா - சீனா எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் சூழலில், இரு நாடுகளின் விமானப்படை வலிமையை ஒப்பிட்டு வெளியாகியுள்ள புதிய ஆய்வு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Premkumar S

சீனாவின் ராணுவத்தை நீண்டகாலமாக கண்காணித்து வரும் மூத்த ஆய்வாளரனான ஆண்ட்ரியாஸ் ரூப்ரெக்ட் (Andreas Rupprecht) அமெரிக்காவின் தி வார் ஸோன் (The War Zone) பாதுகாப்பு இதழில், இந்தியா மற்றும் சீனாவின் வான்பாதுகாப்பு அமைப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான ஸ்டெல்த் போர் விமான திறனில் உள்ள இடைவெளி மிகவும் கவலைக்குரியதாக மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த மதிப்பீட்டின்படி, சீனாவிடம் தற்போது சுமார் 500, J-20 "மைட்டி டிராகன்" (Mighty Dragon) 5-ஆம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் செயல்பாட்டில் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை பலர் கணித்த எண்ணிக்கையை விட இரு மடங்கிற்கும் அதிகம். அதுமட்டுமல்லாமல், உலகின் மிகவும் சிக்கலான போர் விமானங்களில் ஒன்றான J-20-ஐ உற்பத்தி செய்யும் திறனில், சீனா தற்போது அமெரிக்காவையே மிஞ்சியிருக்கலாம் என்றும் அந்த மதிப்பீடு கூறுகிறது. இதற்கு மாறாக, இந்திய விமானப்படையிடம் தற்போது செயல்பாட்டில் உள்ள 5-ஆம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் எதுவும் இல்லை. இதுவே இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.

J-20 ஸ்டெல்லத் விமானங்கள்

முன்னதாக, இந்திய எல்லைக்கு அருகிலுள்ள திபெத் பகுதியில் சீனா சில J-20 ஸ்டெல்லத் போர் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது. இந்த விமானங்கள் ரேடாரில் எளிதில் சிக்காதவை. எதிரியின் வான் பாதுகாப்பை ஊடுருவி, முக்கிய இலக்குகளை முதலில் தாக்கி, பாதுகாப்பாக திரும்பும் திறன் கொண்டவை. நவீன போர்களில் ஸ்டெல்த் போர் விமானங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிரி வான் எல்லைக்குள் முதலில் நுழைந்து, எதிரி போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை செயலிழக்கச் செய்து, முக்கிய இலக்குகளை தாக்கி, அதன் பிறகு வரும் மற்ற விமானங்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றன.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை, எதிர்கால போர்களில் இந்தியா வான்படை சக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டியதாகவும் அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. இந்தியாவின் 5-ஆம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டமான AMCA (Advanced Medium Combat Aircraft) இன்னும் உருவாக்க நிலையில் உள்ளது. அது முழுமையாக விமானப்படையில் இணைவதற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என மதிப்பிடப்படுகிறது.

அதேசமயம், AMCA-வின் ஸ்டெல்லத் விமானங்கள் சேவையில் சேரும் நேரத்திற்குள், சீனாவிடம் சுமார் 1,000 J-20 போர் விமானங்கள் இருப்பதோடு, 6-ஆம் தலைமுறை போர் விமானங்களையும் பெரிய அளவில் இயக்கும் நிலைக்கு அந்த நாடு சென்றிருக்கலாம் என்றும் ஆய்வு எச்சரிக்கிறது. இருப்பினும், ஸ்டெல்த் போர் விமானங்களின் எண்ணிக்கையை மட்டுமே வைத்து ஒரு நாட்டின் வலிமையை மதிப்பிட முடியாது என்றும் கட்டுரை குறிப்பிடுகிறது.

ஸ்டெல்த் விமானங்களைக் கண்டறியும் நவீன ரேடார்கள், சென்சார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளில் இந்தியா முதலீடு செய்து வருகிறது. இவை ஸ்டெல்த் விமானங்களின் முன்னிலையை ஓரளவு குறைக்கக்கூடியவை. ஆனால், ஒரு போர் சூழலில் எண்ணிக்கையும் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் பார்க்கும்போது, இந்தியா தற்போது பூஜ்ஜிய நிலையிலிருந்தே தொடங்க வேண்டிய சூழலில் உள்ளது என அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.