ட்ரம்ப், ஜின்பிங், கமேனி எக்ஸ் தளம்
உலகம்

Iran Israel Clash| ’இன்னொரு நாட்டின் இறையாண்மையில் தலையிட வேண்டாம்’ அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

“இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்” என சீனா வலியுறுத்தியுள்ளது.

Prakash J

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானில் அதிகமான பலி எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, அந்நாட்டின் தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

ட்ரம்ப், அலி கமேனி

இதற்கிடையே, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “கமேனியைக் கொல்ல இப்போதைக்குத் திட்டம் தீட்டவில்லை. அவர் பதுங்கியிருக்கும் இடம் எங்களுக்குத் தெரியும். அவர் எவ்வித நிபந்தனையுமின்றி சரணடைவதே சிறந்த தீர்வு. அமெரிக்காவின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு பதிலடி கொடுத்த ஈரானின் உச்சபட்ச தலைவரான அலி கமேனி, “பயங்கரவாதி சியோனிஸ்ட் ஆட்சிக்கு நாங்கள் நிச்சயம் பதிலடி கொடுப்போம். சியோனிஸ்ட்டுக்கு கருணை காட்ட மாட்டோம். போர் தொடங்கிவிட்டது. இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலையிட்டால், சரி செய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்படும்” எனப் பதிலடி கொடுத்திருந்தார்.

இதனால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உச்சத்தில் உள்ளது. 7வது நாளாக இன்று நடைபெற்ற தாக்குதலில், ஈரான் ராணுவம் இஸ்ரேலின் மத்தியப் பகுதியில் இருந்த மருத்துவமனைக்குக் குறிவைத்தது. தவிர, பிற இடங்களிலும் தாக்கியுள்ளது. இதில், 32 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ”தக்க பதிலடி கொடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

ட்ரம்ப், ஜின்பிங்

இந்த யுத்தத்தில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்கியிருப்பதால், சீனா, ஈரானுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளது. “இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்” என சீனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், "மத்திய கிழக்கில் மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் குறிப்பாக இஸ்ரேல், மக்களின் நலன் கருதி உடனடியாக போரை நிறுத்த வேண்டும். இந்தப் போரில் அமெரிக்கா தலையிடுவதையும் அமெரிக்க படைகள் புகுவதையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது. மற்ற நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் எந்தவொரு செயலையும் சீனா எதிர்க்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.