model image google gemeni
உலகம்

சீனா போட்ட மெகா பிளான்.. ரஷ்யப் படைக்கு ரகசிய பயிற்சி.. உச்சகட்ட பயத்தில் உக்ரைன் ராணுவம்?

உக்ரைன் போரில் சீனா, நடுநிலை வகிப்பதாகவும், தங்களை ஒரு சமாதான மத்தியஸ்தராக முன்னிறுத்துவதாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Prakash J

சீனாவால் ரகசியமாகப் பயிற்சி அளிக்கப்பட்ட ரஷ்யப் படைகள் உக்ரைனுக்கு எதிராகப் போரிட அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், 200 பேருக்கு அவர்கள் பயிற்சி அளித்து அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

russia, china

இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சீனாவால் ரகசியமாகப் பயிற்சி அளிக்கப்பட்ட ரஷ்யப் படைகள் உக்ரைனுக்கு எதிராகப் போரிடத் திரும்பியுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

மூன்று ஐரோப்பிய உளவு நிறுவனங்கள் மற்றும் ராய்ட்டர்ஸ் அளித்த தகவல்களின்படி, சீனாவின் ஆயுதப் படைகள் கடந்த ஆண்டு இறுதியில், சுமார் 200 ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ரகசியமாகப் பயிற்சி அளித்ததாகவும், அவர்களில் சிலர் உக்ரைனில் போரிட அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இருநாட்டு ஒப்பந்தப்படி, பெய்ஜிங் மற்றும் கிழக்கு நகரமான நான்ஜிங் உள்ளிட்ட இராணுவத் தளங்களில் அந்த வீரர்களுக்கு ட்ரோன்களின் பயன்பாட்டை மையமாகக் கொண்ட ரகசியப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள், உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா மற்றும் சபோரிஷியா பகுதிகளில் ட்ரோன்களைக் கொண்டு நேரடியாகப் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அத்தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதேபோல், அந்த ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவில் உள்ள இராணுவத் தளங்களில் நூற்றுக்கணக்கான சீனப் படையினர் பயிற்சி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உக்ரைன் போரில் சீனா, நடுநிலை வகிப்பதாகவும், தங்களை ஒரு சமாதான மத்தியஸ்தராக முன்னிறுத்துவதாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.