அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், வர்த்தக ரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்கு கிடைக்கவில்லை என்றும் கூறி வந்தார். இதையடுத்து சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் அதிக வரிவிதிப்பையும் மேற்கொண்டார். மேலும், பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதிக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். அதில், பிற நாடுகள் தங்கள் பொருள்கள் மீது விதிக்கும் வரி விகிதத்தை சற்றே குறைத்து, ‘தள்ளுபடி’ வரி விகிதங்களை ட்ரம்ப் வெளியிட்டாா். அந்த வகையில் சீனாவுக்கு 34 சதவீதம் வரி விதித்து ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இந்த வரி விதிப்பு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் சீன பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விகிதம் 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும் பதிலுக்கு வரி விதித்துள்ளது.
இதற்கிடையே, ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு எதிா்வினையாக, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி ராணுவ பயன்பாட்டிலும் ஈடுபடுத்தக்கூடிய பொருள்களை அமெரிக்காவின் 16 நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீன வா்த்தகத் துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது.
இதுகுறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. இந்த விவகாரத்தில் நியாயமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அமெரிக்கா விதித்த 34 சதவீத வரிக்கு பழிக்குபழியாக அவர்களுக்கு நாங்களும் 34 சதவீத வரி விதித்துள்ளோம். இந்த கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கு அதிபர் ட்ரம்ப், ''தேவையில்லாமல் மறுபடியும் சீனா தவறு செய்கிறது. அமெரிக்காவின் அதிரடியை கண்டு சீனா பயந்துவிட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போா் பதற்றம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.