அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், வர்த்தக ரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்கு கிடைக்கவில்லை என்றும் கூறி வந்தார். இதையடுத்து சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் அதிக வரிவிதிப்பையும் மேற்கொண்டார். மேலும், பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதிக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, சமீபத்தில் (ஏப்.4) உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். அதில், பிற நாடுகள் தங்கள் பொருள்கள் மீது விதிக்கும் வரி விகிதத்தை சற்றே குறைத்து, ‘தள்ளுபடி’ வரி விகிதங்களை ட்ரம்ப் வெளியிட்டாா். அந்த வகையில் சீனாவுக்கு 34 சதவீதம் வரி விதித்து ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இந்த வரி விதிப்பு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் சீன பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விகிதம் 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும் பதிலுக்கு வரி விதித்துள்ளது. இதற்கிடையே, ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு எதிா்வினையாக, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி ராணுவ பயன்பாட்டிலும் ஈடுபடுத்தக்கூடிய பொருள்களை அமெரிக்காவின் 16 நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீன வா்த்தகத் துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. இதன்மூலம், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போா் பதற்றம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த நிலையில், ”தங்களுக்கு விதித்த பதில் வரியை சீனா திரும்பப்பெறாவிட்டால் அதற்கு கூடுதலாக 50% வரி விதிக்கப்படும்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், “தங்களுடனான வணிகத்தில் சீனா ஏற்கெனவே பல தில்லுமுல்லுகளைச் செய்து வருகிறது. 34% வரியை சீனா இன்றைக்குள் திரும்பப்பெறாவிட்டால், நாளை மேலும் 50% வரி விதிக்கப்படும். மேலும், சீனாவுடனான வரி தொடர்பான சமரச பேச்சுகள் அனைத்தையும் கைவிட்டுவிடுவேன்” என ட்ரம்ப் தன் ட்ரூத் சமூக தளத்தில் எச்சரித்துள்ளார். ஒருவேளை, ட்ரம்ப் இதைச் செய்யும் பட்சத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியின் மொத்த மதிப்பு 104% ஆக அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
”இது வெறும் மிரட்டல். அமெரிக்க வரிவிதிப்பை எதிர்த்து சீனா இறுதிவரை போராடும்” என அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு சீனா பதிலளித்துள்ளது. இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவிற்கு எதிரான வரிகளை அதிகரிப்பதாக அமெரிக்கா அச்சுறுத்துவது என்பது தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது. இது அமெரிக்காவின் மிரட்டலை மீண்டும் அம்பலப்படுத்துகிறது. அமெரிக்கா தனது விருப்பப்படி நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால், சீனாவும் இறுதிவரை போராடும். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா முயல்கிறது. வர்த்தகப் போரில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை” என அமைச்சகம் அதில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, "2017 ஆம் ஆண்டு அமெரிக்கா (முதல்) வர்த்தகப் போரை ஆரம்பித்ததிலிருந்து - அமெரிக்கா எவ்வாறு போராடினாலும் அல்லது அழுத்தம் கொடுத்தாலும் - நாங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து முன்னேறி வருகிறோம், மீள்தன்மையை வெளிப்படுத்துகிறோம் - 'எவ்வளவு அழுத்தம் பெறுகிறோமோ, அவ்வளவு வலிமையானவர்களாக மாறுகிறோம். அமெரிக்க வரிகள் (சீனாவில்) தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் 'வானம் இடிந்து விழாது' " என்று ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய பீப்பிள்ஸ் டெய்லி விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளது.