சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து 4ஆவது ஆண்டாக சரிந்துள்ளது. மக்கள்தொகை புள்ளிவிவரத்தை சீன அரசு வெளியிட்டுள்ளது.
சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து 4ஆவது ஆண்டாக சரிந்துள்ளது. மக்கள்தொகை புள்ளிவிவரத்தை சீன அரசு வெளியிட்டுள்ளது. இதில் 2024ஆம் ஆண்டைவிட 2025ஆம் ஆண்டு மக்கள்தொகை 30 லட்சம் குறைந்து 140 கோடியே 40 லட்சமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 79 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பிறந்ததாகவும் இது முந்தைய ஆண்டைவிட 17% குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. இது 77 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான பிறப்புவீதமாகும். மக்கள்தொகை சரிவால் எதிர்காலம் குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில் குழந்தைப் பிறப்புக்கு ஊக்கம் உள்ளிட்ட சலுகைகளை சீன அரசு அளித்து வருகிறது. ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற வேண்டும் என்ற விதியும் ஏற்கெனவே கைவிடப்பட்டுவிட்டது. குழந்தை வளர்ப்பதற்கு நிதியுதவி முதல் கருத்தடைச் சாதனங்களுக்கு வரி உயர்வு வரை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்கள்தொகையைப் பெருக்க சீனா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே, சீனாவில் திருமணங்கள் குறைந்ததும் மக்கள்தொகை சரிவுக்கு ஒருகாரணமாக கூறப்படுகிறது. திருமணங்களை ஊக்குவிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் தற்போது பலன் தரத் தொடங்கியுள்ளன. கடந்தாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் திருமணங்கள் 8.5% அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த தரவுகளை திருமண பொருட்கள் விற்பனையாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். திருமணத்திற்கான சிறப்பு ஆடைகள், பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். திருமணங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களும் தங்கள் வருவாய் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.