இந்தியா சீனா pt web
உலகம்

அமைதியாகக் குடைச்சல் தரும் சீனா... இந்தியா பாதிக்கப்படுமா?

அமெரிக்கா வரி ஆயுதத்தை கொண்டு இந்தியா போன்ற நாடுகளை மிரட்டிக்கொண்டுள்ளது. ஆனால் சீனாவோ இந்தியா போன்ற போட்டி நாடுகளுக்கு குடைச்சல் தரும் நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தொடங்கிவிட்டது.

PT WEB

அமெரிக்கா வரி ஆயுதத்தை கொண்டு இந்தியா போன்ற நாடுகளை மிரட்டிக்கொண்டுள்ளது. ஆனால் சீனாவோ இந்தியா போன்ற போட்டி நாடுகளுக்கு குடைச்சல் தரும் நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தொடங்கிவிட்டது.

புலி வருது புலி வருது என ட்ரம்ப் விடுத்து வந்த மிரட்டல் நிஜமாகிவிட்டது. பல நாடுகளுக்கு அவர் விதித்த பதில் வரி வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு ஆர்ப்பாட்டமாக அமெரிக்கா தந்து கொண்டிருக்கும் தலைவலிகளை சீனா சத்தமின்றி வேறு ஒரு வழியில் தந்து வருகிறது.

சீனா

அமெரிக்கா தனது இறக்குமதிகளை கடினமாக்கியுள்ளது என்றால் சீனா தன் ஏற்றுமதிகளை கடினமாக்கியுள்ளது. தங்களின் நவீன தொழில்நுட்பங்கள், நவீன தொழில்நுட்ப சாதனங்களுக்கான மூலப்பொருட்கள், நவீன தொழில் நுட்பங்களை அறிந்த நிபுணர்களால் வெளிநாடுகள் எவ்வகையிலும் பலன் பெற்றுவிடக்கூடாது என்பதில் சீனா உறுதியாக உள்ளது.

இதன் ஒரு பகுதியாக மின்னணு உலகில் மிக முக்கியமான மூலப்பொருளாக விளங்கும் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது. இதில் வாகன உற்பத்திக்கு மிக அவசியமான அரிய வகை காந்தங்களும் அடங்கும். சீனாவிலிருந்து இவை எளிதாக கிடைக்காததால் இந்தியாவில் கார்கள் உற்பத்தி முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இன்னொருபுறம் இந்தியாவில் ஆப்பிள் ஃபோன் தயாரிப்புகளுக்கு உதவி வந்த தங்கள் நாட்டு பொறியாளர்களை சீனா திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது. இதனால் இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் ஏற்றுமதி பின்னடைவை சந்திக்கும் என கூறப்படுகிறது.

பிரதமர் மோடி

அரிய வகை கனிமங்களை சீனா வர்த்தக ஆயுதமாக்கிக்கொள்வதாக பிரிக்ஸ் மாநாட்டில் மறைமுகமாக சாடினார் பிரதமர் மோடி. எனினும் இது போன்ற சவால்களை எதிர்கொள்ள இந்தியாவும் தயாராகிவிட்டது. அரிய வகை காந்தங்களை உற்பத்தி செய்யும் வகையில் ஆயிரத்து 350 கோடி ரூபாய் செலவில் ஊக்குவிப்புத்திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் கையே நமக்கு உதவி என்பது தனி மனித வாழ்க்கையில் மட்டுமல்ல உலகளவிலும் பொருந்தும் என்பது அமெரிக்கா மற்றும் சீனாவின் நடவடிக்கைகளால் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.