அமெரிக்கா வெளிநாட்டு ஊழியர்களை கட்டுப்படுத்த விசா விதிகளைக் கடுமையாக்கி வரும் நிலையில், சீனா புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், நாள்தோறும் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்றாக, விசா கட்டுப்பாடுகளிலும் புதிய நடைமுறைகளைப் புகுத்தியுள்ளார். அந்த வகையில், தற்போது H1B விசா விண்ணப்பக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக தற்காலிகமாக அனுமதிக்கப்படும் விசாவே H1B ஆகும். குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். 1990இல் உருவாக்கப்பட்ட இந்த விசா மூலம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகள் பணியாற்ற முடியும். H1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பதால், கணினி குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படுகிறது. இன்னொருபுறம், பெரும்பாலான H1B விசா வைத்திருப்பவர்கள், அமெரிக்காவிற்கு வந்தவுடன், கிரீன் கார்டு வரிசையில் நுழைந்து நீண்டகாலம் தங்குவதற்கு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில், H1B விசா திட்டத்தால் இந்தியர்களே அதிகம் பயன்பெறுகின்றனர். பவுண்ட்லெஸ் என்ற அமெரிக்க குடியேற்ற ஆலோசனை மையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்படி, H1B விசாக்களில் 72.6 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்ததாக சீனர்கள் வெறும் 11.7 சதவிகிதம் பேர் மட்டுமே பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ”H1B விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.90 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும்” என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். ஹெச்-1பி விசா காரணமாக வேலை இழக்கும் அமெரிக்கர்களை பாதுகாக்கவே விசா கட்டணம் உயர்த்தப்பட்டதாக அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. இது, நேற்று முதல் (செப்டம்பர் 21) அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 12 மாதங்கள் வரை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், இதற்கான மாற்று வழிகளையும் அவர்கள் தேடி வருகின்றனர்.
ஒருபுறம், அமெரிக்கா வெளிநாட்டு ஊழியர்களை கட்டுப்படுத்த விசா விதிகளைக் கடுமையாக்கி வரும் நிலையில், சீனா புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியல், கணிதம் சார்ந்த துறைகளில் உலக அளவில் உள்ள சிறந்த ஊழியர்களை ஈர்க்கும் நோக்கில் ‘K’ விசாவை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவுக்குப் போட்டியாக சீனா அறிமுகம் செய்திருக்கும் இந்த K விசா, அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நீதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, ’K விசா, சீனாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களில் STEM துறைகளில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பை வழங்கும்’ என தெரிவித்துள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தேவைகளை விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதுதொடர்பாக வெளிநாடுகளில் உள்ள சீன தூதரங்கள் மூலம் அவர்கள் விரிவான விவரங்களையும் ஆவணங்களையும் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், சீனாவில், தற்போது 12 சாதாரண விசா வகைகளுடன் ஒப்பிடும்போது, K விசா குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எனக் கூறப்படுகிறது. அது, நீண்டகாலம் தங்கக்கூடியதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இந்த விசாவைப் பெரும்பாலான வேலை விசாக்களைப் போலல்லாமல், விண்ணப்பதாரர்கள் ஓர் உள்நாட்டு முதலாளி அல்லது நிறுவனத்திடம் அழைப்பிதழை வழங்க வேண்டிய அவசியமில்லை. தவிர, K விசா வைத்திருப்பவர்கள் சீனாவில் தொழில்முனைவோர் மற்றும் வணிக நடவடிக்கைகளுடன் கூடுதலாக கல்வி, கலாசாரம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கல்விப் பரிமாற்றங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
சீனாவின் இந்த முடிவு, அதிக செலவுகள் அல்லது நீண்ட செயல்முறைகள் இல்லாமல் வெளிநாடுகளில் வாய்ப்புகளைத் தேடும் திறமையான தொழிலாளர்களுக்கு ஒரு புதிய பாதையைத் திறக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விசா அளவுக்கு இந்த K விசா தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர், ஆய்வாளர்கள். அதேநேரத்தில், இப்போதைக்கு, அமெரிக்காவிற்குப் பதில் பிற சர்வதேச வாய்ப்புகளைத் தேடும் இளைஞர்களுக்கு இது ஆறுதலாக இருக்கும் என்கின்றனர் அவர்கள்.