விண்வெளியில் சூரிய மின்சக்தி திட்டம் pt
உலகம்

விண்வெளியில் சூரிய மின்நிலையம்.. சீனாவின் Sun Chasing திட்ட சோதனை வெற்றி..! வியப்பில் உலகம்!

விண்வெளியில் சூரிய மின்நிலையம் அமைக்கும் முதற்கட்ட சோதனையில் சைனா வெற்றிபெற்றுள்ளது.

PT WEB

விண்வெளியில் சூரிய மின்நிலையம் அமைத்து, கம்பிகளில்லாமல் மின்சாரத்தை பூமிக்கு அனுப்பும் Sun Chasing திட்டத்தின் தரை சோதனையை சீனா வெற்றிகரமாக முடித்துள்ளது. 75 மீட்டர் கோபுரத்தில் சூரிய ஒளியை மைக்ரோவேவ் அலைகளாக மாற்றி, 100 மீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் முறையில் அனுப்பி, ரிசீவர் ஆண்டெனாக்கள் மூலம் மீண்டும் தூய்மையான மின்சாரமாக மாற்றியுள்ளனர். இதனால் விண்வெளி மின்சாரப் புரட்சியில் சீனா முன்னிலை பெற்றுள்ளது.

விண்வெளியில் சூரிய மின்நிலையம் அமைத்து, அங்கிருந்து எவ்வித கம்பிகளும் இன்றி வயர்லெஸ் முறையில் பூமிக்கு மின்சாரத்தைக் கடத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தின் முதற்கட்ட சோதனையை சீன விஞ்ஞானிகள் முழுமையாக வெற்றிகரமாக முடித்து உலகை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர். சீனாவின் புரட்சிகரமான 'Sun Chasing' திட்டத்தின் தரைவழி சோதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு, சர்வதேச அறிவியல் அரங்கில் பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது.

இந்த அதிநவீன சோதனையில், 75 மீட்டர் உயரமுள்ள கோபுரத்திலிருந்து கண்ணாடி மூலம் சூரிய ஒளி ஈர்க்கப்பட்டது. விண்வெளியில் சோலார் பேனல்கள் மூலம் உறிஞ்சப்படும் சூரிய ஆற்றலை, உயர் அதிர்வெண் கொண்ட மைக்ரோவேவ் அலைகளாக மாற்றுவதில் சீன விஞ்ஞானிகள் முதன்முதலில் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு மாற்றப்பட்ட மைக்ரோவேவ் ஆற்றலை, காற்றில் எவ்வித மின்சாரக் கம்பிகளும் இன்றி 100 மீ. தூரத்திற்கு ஒளியின் வேகத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் பாய்ச்சிச் சாதனை படைத்துள்ளனர். பின்னர் தரைத்தளத்தில் உள்ள ரிசீவர் ஆண்டெனாக்கள் (Receiver Antennas) மூலம் அந்த அலைகள் மீண்டும் தூய்மையான மின்சாரமாக வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளன.

பூமியில் அமைக்கப்படும் சாதாரண சூரிய மின்நிலையங்களால் இரவு நேரங்களிலும், மேகமூட்டமான காலங்களிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. ஆனால், விண்வெளியில் இந்த தடைகள் எதுவும் இல்லை. விண்வெளியில் பூமியின் புவிவட்டப் பாதையில் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சூரிய மின்உற்பத்தி செயற்கைக்கோள்களை நிறுவுவதே சீனாவின் இறுதி இலக்காகும். இதன் மூலம் புவி ஈர்ப்பு மற்றும் காலநிலைக் கட்டுப்பாடுகள் இன்றி, வருடத்தில் 365 நாள்களும், 24 மணி நேரமும் தடையற்ற தூய்மையான பசுமை மின்சாரத்தை பூமிக்கு நேரடியாக அனுப்ப முடியும்.

சீன விண்வெளி தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கால அட்டவணையின்படி, இத்திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் அதிவேகத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. 2028-க்குள் இத்தொழில்நுட்பத்தின் சிறிய அளவிலான சோதனைச் செயற்கைக்கோள் விண்வெளிக்கு ஏவப்பட்டு, விண்வெளியில் இருந்து நேரடியாகப் பூமிக்கு மின்சாரம் கடத்தும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். 2035-ம் ஆண்டிற்குள் 10 மெகாவாட் திறனில் விண்வெளி சூரிய மின் நிலையம் அமைக்கப்படும். 2050-ம் ஆண்டிற்குள் 1 கிகாவாட் (GW) திறனில் வணிகரீதியான விண்வெளி சூரிய மின் நிலையங்களைச் சீனா முழுமையாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரும்.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமைகள் (Space Agencies) இதே போன்ற ஆய்வுகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், சீனா தரைத்தள சோதனையை முதலில் வெற்றிகரமாக முடித்து விண்வெளி மின்சாரப் புரட்சியில் உலக நாடுகளை விடப் பல படிகள் முன்னிலைக்குச் சென்றுள்ளது.