செய்தியாளர் - கார்த்திகேயன்
பொதுவாக விமானங்கள் தான் அதி வேகமாக செல்லும் வாகனங்களாக உள்ளன. இதனால், அவசரமாக வெளியூர்களுக்கு செல்லும் நபர்கள், அதிக செலவானாலும் பரவாயில்லை என்று, விமானங்களையே அதிகம் நாடுவார்கள். இந்த விமான பயணங்கள் மிக அதிக கட்டணங்களை கொண்டிருப்பதால், நடுத்தர வர்க்கத்தினரால், இதனை ஏற்க முடியாது.
ஆனால், இந்த விமான வேகத்தையே மிஞ்சும் அளவுக்கு, ஒரு ரயிலால் பயணிக்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா?. ஆம், அதனை சீனா சாத்தியமாக்கியுள்ளது. அதாவது, சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள டோங்கு சோதனை மையத்தில், மேக்லெவ் என்ற அதிகவேக ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த சோதனை ஓட்டத்தின் முடிவில், சுமார் 1.1 மெட்ரிக் டன் எடைக் கொண்ட இந்த ரயில், வெறும் 5 நொடிகளுக்குள் 800 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. பொதுவாக விமானங்களின் வேகம் என்பது மணிக்கு 800 முதல் 900 கிலோமீட்டர் வரை இருக்கும்.
ஆனால், விமானத்தை விட அதிகமான வேகத்தில் தரையில் பறக்கும் வகையில் இந்த ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. வழக்கமான தண்டவாளங்களைப் போல இல்லாமல், சக்திவாய்ந்த மின்காந்த விசையைப் பயன்படுத்தி தண்டவாளத்திலிருந்து சிறிது உயரே மிதந்தபடி இந்த ரயில் இயக்கப்படுகின்றது.
இதனால் ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே எந்தவித உராய்வும் ஏற்படுவதில்லை. இதன் காரணமாகவே இது வழக்கமான ரயில் போல இல்லாமல் ஒரு 'பறக்கும் ரயில்' என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிவேக தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்தால் பயண நேரங்கள் மிகப்பெரிய அளவில் குறையும்.
உதாரணத்திற்கு, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்ல 13 மணி நேரங்கள் ஆகும். ஆனால், இந்த ரயிலின் மூலம், பயணம் மேற்கொண்டால், வெறும் 1 மணி நேரத்திலேயே சென்றுவிட முடியும். சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த ரயில், படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.