robots at work Reuters
உலகம்

நடனம், பல்டி எல்லாம் பழசு.. ரோபோக்களுக்கு மூளை.. அமெரிக்காவை முந்தும் சீனா!

Embodied AI மூலம் ரோபோக்களை மனிதர்களுக்கு இணையாக மாற்றும் சீனா.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

மனிதர்களைப் போல நடப்பது, ஓடுவது, நடனம் ஆடுவது, பல்டி அடிப்பது என பல்வேறு செயல்களைச் செய்து சீனாவின் ரோபோக்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. ஆனால், இத்துடன் நின்றுவிட சீனா தயாராக இல்லை. அடுத்ததாக மனிதர்களைப் போல சிந்தித்து, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, தானாகவே முடிவெடுக்கும் திறனை ரோபோக்களுக்கு வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

robots

இதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் சீன நிறுவனங்கள் பல கோடி டாலர்களை முதலீடு செய்து வருகின்றன. இந்தத் தொழில்நுட்பம் 'Embodied AI' என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ரோபோக்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலைப் புரிந்துகொண்டு, புதிய வேலைகளைக் கற்றுக்கொண்டு, தானாகவே செயல்படுவதுதான் இதன் நோக்கம்.

முதலீட்டைக் குவிக்கும் சீனா!

ITjuzi என்ற ஆய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் சீனாவின் Embodied AI நிறுவனங்கள் 322 ஒப்பந்தங்கள் மூலம் 93.5 பில்லியன் யுவான் (சுமார் 13 பில்லியன் டாலர்) முதலீட்டைப் பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 5 மடங்கு அதிகமாகும்.

Robots

ரோபோக்களைத் தயாரிப்பதற்கான செலவு குறைந்து வருவதால், அவற்றின் Hardware ஐ (வன்பொருள்) விட சிந்திக்கும் திறனை வழங்கும் AI தொழில்நுட்பத்தில்தான் எதிர்கால லாபம் இருப்பதாக நிறுவனங்கள் கருதுகின்றன.

இந்தப் போட்டியில் அமெரிக்காவும் சீனாவும் நேரடியாக மோதுகின்றன. அமெரிக்காவின் Physical Intelligence, Skild AI, Generalist போன்ற நிறுவனங்களும் ரோபோக்களுக்கான AI மென்பொருளை உருவாக்கி வருகின்றன.

Generalist நிறுவனத்தின் GEN-1.5 என்ற AI மாடல் எளிய வேலைகளில் சுமார் 60 சதவீதத்தைச் செய்து முடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் X Square, Galaxea, Spirit AI போன்ற நிறுவனங்கள் தலா சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டியுள்ளன. மேலும், Unitree நிறுவனம் ரோபோக்களின் செயல்பாடுகளை மேம்படுத்த 30 ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு AI தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

robots

சீனாவின் X Square நிறுவனம் மனிதர்கள் ஒரு வேலையைச் செய்வதைப் பார்க்கும் ஒரே வீடியோவிலிருந்து ரோபோக்கள் புதிய செயல்களைக் கற்றுக்கொள்ளும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

எதிர்காலத்தில் தொழிற்சாலைகள், சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் செயல்படும் சூழல் உருவாகலாம். இதில் எந்த நாடு சிறந்த AI மூளையை உருவாக்குகிறதோ, அந்த நாடே உலக ரோபோட்டிக்ஸ் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.