\
military march in iran
military march in iran Reuters

'Zero Hour' பட்டியலை வெளியிட்ட ஈரான்.. ஆபத்தில் 8 நாடுகள்!

அமெரிக்கா-ஈரான் மோதல்: ராணுவத் தயாரிப்புகளை அதிகரிக்கும் இரு தரப்புகள்!
Published on: 
Summary

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், 8 நாடுகளின் பொருளாதார மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை குறிவைத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் எச்சரிக்கை. அமெரிக்கா-இஸ்ரேல் மீண்டும் தாக்கினால், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்கள் இலக்காகும் என தகவல்.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் 7 மாதங்களை கடந்தும் நடந்து வருகிறது. அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி தோல்வி அடைந்தால், ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ட்ரம்ப் உத்தரவிடக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள 8 நாடுகளின் முக்கியக் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் எனப் பல இடங்கள் ஈரானின் இலக்குப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mojtaba Khamenei & Masoud Pezeshkian
Mojtaba Khamenei & Masoud PezeshkianReuters

ஈரான் அரசு ஊடகங்கள் 'ஜீரோ ஹவர்' (Zero Hour) என்ற தலைப்பில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதல்களின் இலக்குகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த இலக்குப் பட்டியலில் இஸ்ரேல், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய 8 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, ராணுவ முகாம்களை மட்டுமே குறிவைக்காமல், இந்த நாடுகளின் முக்கியப் பொருளாதார மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை ஈரான் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய இடங்கள்!

Riyadh
Riyadh reuters

சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலைகள், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில் பாதைகள், மெட்ரோ ரயில் கட்டமைப்புகள், கடலுக்கு அடியில் செல்லும் தகவல் தொடர்பு கேபிள்கள், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவை அடங்கும்.

இதற்கிடையே, அக்டோபர் 31ஆம் தேதி ஈரானின் உச்ச தலைவர் மூன்று முக்கிய ராணுவ அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். ராணுவப் படைகளின் தலைமைத் தளபதி அலி அப்துல்லாஹி, புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தளபதி அகமது வாஹிதி மற்றும் ராணுவத் தளபதி அமீர் ஹடாமி ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

IRGC
IRGCReuters

அப்போது, எந்தப் பகுதியில் இருந்தும் எந்த வகையான அச்சுறுத்தல் வந்தாலும் அதற்கு உடனடியாகவும் வலுவாகவும் பதிலடி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரசீக வளைகுடா, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் ஈரான் தனது ராணுவத் தயார் நிலையை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மறுபுறம், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அமெரிக்காவும் தனது ராணுவத் தயாரிப்புகளை அதிகரித்து வருகிறது.

military march in iran
2 நாட்களில் ஹார்முஸ் நீரிணையை திறப்போம்.. அமெரிக்காவுக்கு ஈரான் வைத்த மெகா செக்!