கனடாவில் கொள்முதல் செய்யப்படும் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பாக்டீரியா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வகை தொற்று பறவைக் காய்ச்சலின் விளைவுகளுடன் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் மற்றும் உடல் பலவீனமானவர்கள் இவ்வகையான முட்டைகளைப் பயன்படுத்தும்போது மேலும் அது அவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியன இதன் அறிகுறிகளாகக் காணப்படுகிறது.
இதையடுத்து, கனேடிய உணவுப் பரிசோதனை முகவர் நிறுவனம் இவ்வகையான முட்டைகளைக் கொள்முதல் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது. கொம்பிலிமன்ட்ஸ், போர்மோஸ்ட், கோல்டன் வெலி, ஐ.ஜீ.ஏ மற்றும் வெஸ்டர் பெமிலி உள்ளிட்ட 6 வகையான முட்டைகளில் இந்த பாக்டீரியா தொற்று அதிகம் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
மேலும், பிரிட்டிஷ் கொலம்பியா, மானிடோபா மற்றும் ஒன்றாரியோ போன்ற மாகாணங்களில் இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளான முட்டை வகைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என அது தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த முட்டைகளைக் கொள்முதல் செய்தவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வகை முட்டைகள் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.