அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு மற்றும் அறிவிப்புகளால் கனடா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளுக்கு இடையேயான அரசியல் களம் உலகம் முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. இதனால் இவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிலவலாம் எனக் கணிக்கப்படுகிறது. இதன் நீட்சியாக தற்போது டெஸ்லா குறிவைக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே, கனடாவில் உள்நாட்டு அரசியல் சிக்கலில் உள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்தடுத்த அறிவிப்புகள் அந்நாட்டுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடைய டெஸ்லா குறிவைக்கப்பட்டு உள்ளது. ”ட்ரம்பும், எலான் மஸ்க்கும் கனடா நாட்டின் ஆட்டோமொபைல் துறையையும், தொழிலாளர்களையும், வரி மூலம் தாக்கினால், நான் டெஸ்லா கார்கள் மீது 100% வரி விதிப்பேன். கனடா நாட்டினர் கனடாவில் தயாரிக்கப்பட்ட EVகள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட்களை வாங்கினால் 10,000 டாலர் தள்ளுபடி தரப்படும். கனடா தொழிலாளர்களை ஆதரித்து, அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலடி கொடுப்போம்” என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
மின்சார வாகன தயாரிப்புக்கு பெயர்பெற்ற நிறுவனமாக அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் உள்ளது. இது, எலான் மஸ்க்கின் நிறுவனமாகும். அமெரிக்காவில் ட்ரம்புக்கு வலதுகரமாக எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார். இதைவைத்தே, கனடா டெஸ்லாவைக் குறிவைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.