கனடா, மெக்சிகோவுக்கு அதிக வரி | தற்காலிகமாக நிறுத்திவைத்த அமெரிக்கா!
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார். அந்த வகையில், முன்னமே அறிவித்தபடி, கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு புதிய வரிகளை அறிவித்தார்.
அதன்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. கனடாவின் ஆற்றல் துறை சார்ந்த இறக்குமதிகளுக்கு 10% வரியும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மெக்சிகோ, கனடா அரசுகளும் அமெரிக்கா பொருட்களுக்கான வரியை உயர்த்தின.
பதற்றமான சூழலில், ட்ரம்புடன் தொலைபேசியில் கலந்துரையாடிய மெக்சிகோ அதிபர் கிளாடியா, போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதன் காரணமாக மெக்சிகோ பொருட்கள் மீதான வரி உயர்வை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இதேபோன்று, கனடா மீதான வரி உயர்வு விவகாரம் தொடர்பாக ட்ரம்புடன் தொலைபேசியில் ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை மேற்கொண்டார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், கனடா மீதான வரி விதிப்பு நடவடிக்கையை 30 நாட்கள் நிறுத்திவைக்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அகதிகள் விவகாரம், கடத்தலை தடுக்க சிறப்பு குழுவை ஏற்படுத்த இருப்பதாக அமெரிக்காவிடம் கூறியதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்த நிலையில், கனடாவுடனான பொருளாதார நடவடிக்கைகள் கட்டமைக்கப்படுமென ட்ரம்ப் அறிவித்துள்ளார்.