அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார். அந்த வகையில், முன்னமே அறிவித்தபடி, கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு புதிய வரிகளை அறிவித்தார்.
அதன்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஆற்றல் துறை சார்ந்த இறக்குமதிகளுக்கு 10% வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமான குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தேசிய அவசரநிலை முடிவுக்கு வரும் வரை புதிய வரிகள் அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் புதிய வரி விதிப்பை அறிவித்தார். “155 பில்லியன் கனடா டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்” என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
“முதல் சுற்றாக 30 பில்லியன் கனடா டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிப்பானது பிப்ரவரி 4 முதல் அமல்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து மூன்று வாரங்களில் 125 பில்லியன் கனடா டாலர் மதிப்புள்ள பொருள்கள் மீது இந்த புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்படும்.
இந்த புதிய வரி விதிப்பானது அன்றாடப் பொருள்களான, அமெரிக்க பீர், ஒயின், பழங்கள், காய்கறிகள், நுகர்வோர் சாதனங்கள், மரக்கட்டை, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களுக்கு பொருந்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், “நிச்சயமாக நாங்கள் அதிகரிக்க நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் கனடாவுக்காகவும் கனடா மக்களின் வேலைவாய்ப்புக்காகவும் துணை நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.