பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்த பிரிட்டனுக்கு, இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது. இருந்தபோதும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் பேச்சுவார்த்தை ஏற்பட்டு சில நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், மறுபடியும் இன்றுவரை போர் தொடர்கிறது. இதுவரை அங்கு 65,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர். இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை அங்கு தீவிரப்படுத்தியுள்ளது. காஸாவில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
காஸாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய இருமுனைத் தாக்குதலில் நேற்று ஒரே நாளில் 91 பேர் உயிரிழந்தனர். இதில் 76 பேர் காஸா நகரத்தில் மட்டும் உயிரிழந்தனர். பெரிய கட்டடங்கள் மட்டுமின்றி சிறிய கூடாரங்களைக்கூட விட்டுவைக்காமல் இஸ்ரேல் படைகள் மூர்க்கமாக தாக்கி வருகின்றன. இஸ்ரேல் விமானங்கள் ஒருபுறம் குண்டு மழை பொழியும் நிலையில், மறுபுறம் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு தரைவழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதிலிருந்து தப்ப வடக்கு, மத்திய காஸாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி கூட்டம்கூட்டமாகப் படையெடுத்துச் செல்கின்றனர். தெற்கில் இஸ்ரேல் ராணுவத்தின் மனிதாபிமான பகுதிகளுக்கு பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர். காஸா மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு எதிராக போப் பதினான்காம் லியோ குரல் கொடுத்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடிய மக்கள் மத்தியில் பேசிய அவர், வன்முறை, வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல், பழிவாங்குதல் போன்றவற்றால் எதிர்காலத்தைக் கட்டமைக்க இயலாது எனக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பாலஸ்தீனத்தைத் தனிநாடாக பிரிட்டன் அங்கீகாரம் அளித்திருப்பதன் மூலம் இஸ்ரேலுக்குச் சர்வதேச அழுத்தம் அதிகரித்திருக்கிறது. இஸ்ரேல் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீன மக்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் இருநாடுகள் தீர்வுக்கு நம்பிக்கை மற்றும் அமைதிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் பாலஸ்தீனம் என்ற தனிநாட்டினை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக கூறி உள்ளார்.
ஆனால், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது என்பது பயங்கரவாதத்திற்கு அளிக்கப்படும் அபத்தமான வெகுமதி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் அங்கீகாரம் தொடர்பாக பேசிய அவர், பாலஸ்தீனத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிப்பது குறித்து ஐ.நா.விலும், சர்வதேச மன்றங்களிலும் முறையிடவிருப்பதாகத் தெரிவித்தார். பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது என்பது இஸ்ரேலின் இருப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொது சபையில் பிரான்ஸ், கனடா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.