செய்தியாளர் - ராஜ்குமார், ர
ஒரு நாடே மின்சாரம் இல்லாமல் முடங்கிப்போனால் எப்படி இருக்கும்? தற்போதைய சூழலில் இது சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், அப்படியான 'Black Sky' எனப்படும் பேரிடர் சூழல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி என்னதான் இந்த 'Black Sky' நிகழ்வு? எந்த நாட்டில் இதுபோன்றதொரு சூழல் ஏற்படுவதற்கான அச்சம் எழுந்துள்ளது? விரிவாகப் பார்க்கலாம்..
ஒரு நாட்டின் மின்சார விநியோகக் கட்டமைப்பு முழுமையாக முடங்கி, பல நாட்கள் வரை மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்படுவதையே 'Black Sky Event' என்று அழைக்கின்றனர். இதுபோன்ற சூழலில், மின்சாரம் இல்லாமல் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதுடன், செல்போன் சேவைகள், இணையதளம், வங்கிப் பரிவர்த்தனைகள், ஏடிஎம் மையங்கள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகளும் முடங்கக்கூடும். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையே பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இத்தகைய சூழல் பிரிட்டனில் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எழுந்துள்ள விவாதங்கள் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளன.
இதற்குக் காரணம், பிரிட்டன் அரசு 'Be Ready' என்ற அவசரகால விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியிருப்பதுதான். இதன் ஒரு பகுதியாக, அவசரநிலைகளின்போது குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்குத் தேவையான குடிநீர், கெட்டுப்போகாத உணவுப் பொருட்கள், முதலுதவிப் பெட்டி, அத்தியாவசிய மருந்துகள், டார்ச் லைட், பேட்டரிகள் உள்ளிட்ட பொருட்களை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவசரகாலத்தில் கூடுதல் உதவி தேவைப்படும் நபர்களை அடையாளம் காண்பதற்காக Priority Services Register-ல் பதிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பிரிட்டனில் ஏதேனும் மிகப்பெரிய மின்தடை ஏற்படப்போகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இத்தகைய மின்சாரக் கட்டமைப்பு முடக்கத்திற்கு இயற்கைப் பேரிடர்கள் முதல் சைபர் தாக்குதல்கள் வரை பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, புயல், வெள்ளம், காட்டுத்தீ போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளால் மின்சாரக் கட்டமைப்புகள் சேதமடையலாம். அதேபோல், மின்சாரக் கட்டமைப்புகளின் கட்டுப்பாட்டு அமைப்புகள் மீது நடத்தப்படும் சைபர் தாக்குதல்களும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற அபாயங்களைக் கருத்தில் கொண்டே பிரிட்டன் தனது தேசிய இடர் பதிவேட்டில் நாடு தழுவிய மின்தடையையும் முக்கிய அபாயங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, மின்சாரமும் இணையதளச் சேவைகளும் முடங்கினாலும் பொதுமக்களுக்கு அவசரத் தகவல்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீண்டகால மின்தடை ஏற்பட்டாலும் BBC வானொலி ஒலிபரப்புச் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான அவசரகாலத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மின்தடை ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த மின்தடையால் இரு நாடுகளிலும் ரயில் போக்குவரத்து முடங்கியது. கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம், ஒரு நாட்டின் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பு ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையையும் எவ்வாறு முடக்கக்கூடும் என்பதை உணர்த்தியது.
இந்நிலையில், பிரிட்டன் அரசு நாடு முழுவதும் மின்தடை ஏற்படப்போவதாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும். பல்வேறு அவசரநிலைகளை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ள 'Be Ready' திட்டம்.. 'Black Sky' போன்ற மிகப்பெரிய மின்தடைச் சூழலுடன் ஒப்பிடப்பட்டு வருவது கவனத்தைப் பெற்றுள்ளது.