வளர்ச்சிப் பாதையில் இருக்கும் பொருளாதாரங்களின் ஒரு கூட்டமைப்பே, பிரிக்ஸ் (BRICS) எனப்படுகிறது. பிரிக்ஸ் 2009இல் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவால் நிறுவப்பட்டது. இந்தக் கூட்டமைப்பில் தென்னாப்ரிக்கா 2010இல் இணைந்தது. ஆனால், சமீபகாலமாக இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும், கடந்த ஜனவரியில் இந்தோனேசியாவும் பிரிக்ஸ்-இல் இணைந்தன. துருக்கி, அஜா்பைஜான், மலேசியா ஆகிய நாடுகள், கூட்டமைப்பில் இணைய முறைப்படி விண்ணப்பித்துள்ளன.
இந்த நிலையில், 11 உறுப்பு நாடுகளுடன் விரிவுபடுத்தப்பட்ட ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் பிரேசில் தலைமை வகிக்கிறது. அதன்படி, இம்மாநாட்டை அந்த நாடு ரியோ டி ஜெனீரோ நகரில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ’பிரேசிலின் தலைமையின்கீழ், உலளாவிய நிா்வாகம், சீா்திருத்தம், தெற்குலக நாடுகள் இடையிலான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும். எதிா்வரும் உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளின் முன்னேற்றம், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு ரீதியில் முக்கிய முடிவுகள் எட்டப்படும்’ என்று பிரேசில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, டாலரின் மதிப்பீட்டைக் குறைக்கவும், அதற்கு நிகராக பிரிக்ஸ் கூட்டணிக்கு என பொதுவான நாணய மதிப்பை உருவாக்கவும் பிரிக்ஸ் நாடுகள் உறுதியேற்றுள்ளன. இதற்கு தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால், பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அவர் பதவி ஏற்பதற்கு முன்பே எச்சரித்திருந்தார்.
சமீபத்தில்கூட, பிரதமர் மோடியைச் சந்தித்தபிறகு பேட்டியளித்த ட்ரம்ப், ”பிரிக்ஸ் அமைப்பு மிக மோசமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், டாலருடன் விளையாட வேண்டாம். ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்தால், பிரிக்ஸ் நாடுகள் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும். ஒருவேளை, டாலருக்கு நிகரான நாணயத்தைக் கொண்டு வருவேன் என்று அவர்கள் சொல்லும் நாளில், மீண்டும் வந்து என்னிடம், ’நாங்கள் கெஞ்சிக் கேட்கிறோம்’ என்று கெஞ்சும் நிலை ஏற்படும். நான் குறிப்பிட்ட நாளிலேயே பிரிக்ஸ் செத்துவிட்டது” என அவர் தெரிவித்திருந்தார். இந்த அமைப்பின் நிறுவன நாடுகளில் முக்கியமானதாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.