Baloch Liberation Organization ANI
உலகம்

கொ*லப்பட்ட 80 பாக். ராணுவ வீரர்கள்: தீவிரமடையும் பலூச் விடுதலைப் போர்.. இரண்டாக உடைகிறதா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் ராணுவத்தின் 80க்கும் மேற்பட்ட வீரர்களை வீழ்த்தியுள்ளதாக தனி நாடு கோரும் பலூச் விடுதலை அமைப்பு அறிவித்துள்ளது.

Praveen Joshva L

தனிநாடு கோரி போராடும் இயக்கங்கள் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளை ஒடுக்க பாகிஸ்தான் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இதன் காரணமாக பலுசிஸ்தான் விடுதலை அமைப்புக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து பலுச் விடுதலை இராணுவத்தினர் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் பலூச் விடுதலை அமைப்பினர் ஒரே நேரத்தில் 12 இடங்களில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் நிலை குலைந்தது. இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை அமைப்பு அறிவித்தது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக பாகிஸ்தானின் ராணுவத்தினரை குறிவைத்து பலூச் விடுதலை அமைப்பினர் தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசிய பலூச் விடுதலை முன்னணியின் செய்​தித் தொடர்​பாளர் மேஜர் குவாஹ்​ரம், (Major Gwahram) கடந்த அக்டோபர் 22-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் அல்​மாஸ்' ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்​தான் ராணுவ முகாம்​கள், உளவுத்​துறை அலு​வல​கங்​கள் மற்​றும் பாதுகாப்​புச் சாவடிகள் ஆகியவை குறிவைக்​கப்​பட்டு தாக்​குதல் நடத்​தப்​பட்​டன என்று கூறியுள்ளார்.

மேலும் இந்​தத் தாக்​குதல்​களில் பாகிஸ்தான் ராணுவத்தின் 12 கவச வாக​னங்​கள் அழிக்கப்பட்டு , 2 கண்காணிப்பு ட்​ரோன்​கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும், 2 காவல் நிலை​யங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன என்றும் கூறியுள்ளார். அதோடு இந்த தாக்குதல்களில் 80-க்​கும் மேற்​பட்ட பாகிஸ்​தான் ராணுவ வீரர்கள் மற்​றும் உளவுத்​துறைப் பணி​யாளர்​கள் கொல்லப்பட்டனர் என்றும் பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் பலூச் விடுதலை அமைப்பின் இந்த அறிவிப்பு குறித்து பாகிஸ்தான் ராணுவம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தனி நாடு கோரி போராடிவரும் பலூச் விடுதலை அமைப்புக்கு சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட எந்த பெரிய நாடும் வெளிப்படையாக ஆதரவு கொடுக்காத நிலையில், பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிவது என்பது தற்போது நிலையில் வாய்ப்பில்லாத ஒரு நிகழ்வாகவே சர்வதேச அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.