benjamin netanyahu reuters
உலகம்

நெதன்யாகு மகனுக்கு குறி.. பயத்தில் இஸ்ரேல் பிரதமர்..? ரகசிய திட்டம் தீட்டிய ஈரான்!

இந்த விவகாரத்திற்குப் பிறகு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட், நெதன்யாகுவின் மனைவி சாரா மற்றும் அவர்களது இரண்டு மகன்களுக்கான பாதுகாப்பை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

Prakash J

தனது மகன்களில் ஒருவருக்கு ஈரான் குறிவைத்தாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருப்பது உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் மோதலின் பின்னணியில் இந்தக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாருங்கள், பார்க்கலாம்..

அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு இன்றுவரை விடை கொடுக்கவில்லை. எனினும், அவற்றுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், தனது மகன்களில் ஒருவருக்கு ஈரான் குறிவைத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பது அரசியல் உலகை அதிரவைத்துள்ளது.

benjamin netanyahu

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “இது ஒரு நம்பமுடியாத சம்பவம். ஈரான் என் மகன்களில் ஒருவரைக் குறிவைத்தது. ஈரான் அவரைக் கொலை செய்ய முயன்றது” என அதில் தெரிவித்துள்ளார். இருப்பினும், தனது இரு மகன்களில் யார் குறிவைக்கப்பட்டார் என்பதையோ அல்லது அந்த முயற்சி எப்போது, ​​எப்படி நடந்தது என்பது குறித்த விவரங்களையோ அவர் தெரிவிக்கவில்லை.

மேலும், இந்த முயற்சி குறித்து அதிகாரிகள் எப்படி அறிந்தார்கள் என்பதையும் இஸ்ரேலியப் பிரதமர் விளக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்திற்குப் பிறகு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட், நெதன்யாகுவின் மனைவி சாரா மற்றும் அவர்களது இரண்டு மகன்களுக்கான பாதுகாப்பை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அறிக்கைகளின்படி, ஷின் பெட் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு, ஜூலை மாதம் சாரா நெதன்யாகு, யாயிர் மற்றும் அவ்னர் ஆகியோருக்கான தனிப்பட்ட பாதுகாப்பை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

benjamin netanyahu family

நெதன்யாகுவுக்கு யாயிர் மற்றும் அவ்னர் என இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மூத்த மகனான யாயிர், 2024 முதல் நீண்டகாலமாக அமெரிக்காவின் மியாமியில் வசித்து வருகிறார். அதேசமயம் இளைய மகனான அவ்னர், பெரும்பாலும் இஸ்ரேலில் வசித்து வருகிறார். முன்னதாக, யாயிர் நெதன்யாகு அமெரிக்காவில் தங்கியிருந்தது மற்றும் வெளிநாடுகளில் பாதுகாப்பு வழங்குவதற்கான செலவு தொடர்பாக இஸ்ரேல் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து குறிப்பிடத்தக்கது.